வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கிகாரியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள எலும்புக்கூட்டின் டிஎன்ஏ தமிழகப் பழங்குடி மக்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது.
'பெட்ரஸ் எலும்பு' என்பது மனித மண்டை ஓட்டின் சிக்கலான பகுதி. அடிப்படையில் இது காதுகளின் உள்பகுதியைப் பாதுகாப்பதற்காக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், பழங்கால எலும்புக்கூடுகளில் இருந்து டிஎன்ஏவைப் பிரித்தெடுக்கும் மரபியல் விஞ்ஞானிகள், பெட்ரஸ் எலும்பின் ஒரு குறிப்பிட்ட பகுதி அதன் அதீத அடர்த்தியின் காரணமாக சில சமயங்களில் அதிக அளவு டிஎன்ஏக்களைக் கொண்டிருக்கும் என்று கண்டறிந்துள்ளனர். மற்ற திசுக்களில் உள்ளதவைவிட 100 மடங்கு அதிகமாக டிஎன்ஏவை கொண்டிருக்குமாம்.
அந்த வகையில் 2015ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் ராக்கிகாரியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் கிடைத்துள்ள முடிவுகள் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய மிகவும் சூடான விவாதங்களுக்குப் பதில் அளிப்பதாக உள்ளது.
ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த ராக்கிகாரியில் இருந்து கிடைத்த எலும்புக்கூடுகள் 4,500 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகையில் அவர்களின் மரபணுக்கள் குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளன என்றும் குறிப்பாக அக்கால மக்கள் தென்னிந்தியர்களை ஒத்தவர்களாக இருந்தனர் என்றும் ராக்கிகாரி டிஎன்ஏ ஆய்வில் தெரியவருகிறது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1960களிலேயே ராக்கிகாரியில் அகழ்வாராய்ச்சிகள் அவ்வப்போது சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. அப்போதே அந்தப் பகுதியில் முக்கியத்துவம் புலப்பட்டது. ராக்கிகாரி விரிவான நகர்ப்புற குடியேற்றப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்றும் அது நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கவும் வேண்டும் என்று தெரியவந்தது.
2015ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் வசந்த் ஷிண்டே தலைமையிலான குழு ராக்கிகாரி அகழ்வாராய்ச்சியை நடத்தியது. இந்த அகழ்வாராய்ச்சியின்போது மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை மரபணு ஆராய்ச்சிக்கு உட்பட்டுத்தப்பட்டன. அந்த ஆராய்ச்சியில் அங்கம் வகித்த முக்கிய மரபணு ஆய்வாளர் நிராஜ் ராய், ராக்கிகாரி எலும்புக்கூடுகள் தென்னிந்திய பழங்குடி மக்களுடன் அதிக தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றன என்றார். குறிப்பாக, அவை நீலகிரி மலைப்பகுதியில் உள்ள இருளர் இன மக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவையாகத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டார்.
ராக்கிகாரியில் வசித்தவர்களும் நீலகிரி இருளர் பழங்குடி மக்களும் ஒரே பொது மூதாதையரின் வம்சாவளியில் வந்தவர்களாக இருக்கலாம். ராக்கிகாரி பேசிய மொழி ஆரம்பகால திராவிட மொழியாக இருக்கக்கூடும் என்றும் ராய் கூறுகிறார். சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவுக்குப் பிந்தைய ஆயிரம் ஆண்டுகளில் விரிவான மரபணு கலப்பு நிகழ்ந்திருப்பதையும் ராக்கிகரி டிஎன்ஏ சோதனை முடிவுகள் உணர்த்துவதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய மணிஷ் காஷ்யப் பீகாரில் சரணடைந்தார்!
1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அப்போதைய காலனிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிந்து சமவெளி நாகரிகம் வேதகாலத்துக்கு முந்தைய கலாச்சாரத்தின் சான்று என அடையாளம் கண்டனர். சிந்து சமவெளியில் இருந்தவர்கள் வடமேற்கிலிருந்து வந்த படையெடுப்புகளால் அப்பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கருதினர்.
பிற்காலத்தில் வந்த பெரும்பாலான முக்கிய வரலாற்றாசிரியர்கள் வடமேற்கில் இருந்து வந்த படையெடுப்பு பற்றிய கோட்பாடு மிகைப்படுத்தப்பட்டது என்று நிராகரித்தனர். ஆனால், அதே நேரத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை வேதகாலத்துக்கு முற்பட்டதாக வைக்கும் காலவரிசைத் தொடர்ந்தனர்.