ரேணுகா சவுத்ரியை ராஜ்யசபாவுக்கு அனுப்பும் காங்கிரஸ்: பின்னணி என்ன?

By Manikanda Prabu  |  First Published Feb 14, 2024, 8:37 PM IST

தெலங்கானா மாநிலத்தில் இருந்து ரேணுகா சவுத்ரி, அனில் குமார் யாதவ் ஆகிய இருவரை மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சி அனுப்பவுள்ளது


நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக வருகிற 27 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தில் இருந்து ரேணுகா சவுத்ரி, அனில் குமார் யாதவ் ஆகிய இருவரை வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தெலங்கானாவில் இருந்து 3 ராஜ்யசபா இடங்கள் காலியாகியுள்ளது. இதில், இரண்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. எனவே, இரண்டு வேட்பாளர்களை மட்டுமே நிறுத்த கட்சி மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரியுடன் இணைந்து இளம் காங்கிரஸ் தலைவர் அனில் குமார் யாதவை ராஜ்யசபா வேட்பாளராக தேர்வு செய்து காங்கிரஸ் கட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.பி.யும், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் (டிபிசிசி) செயல் தலைவருமான எம். அஞ்சன் குமார் யாதவின் மகன் தான் அனில் குமார் யாதவ். இளம் தலைவரான இவருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பளித்துள்ளது சீனியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், இளையவர்களை வளர்த்து விடும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையை இது காட்டுகிறது. எம்எல்ஏ ஒதுக்கீட்டின் கீழ் பாலமூர் வெங்கட் நர்சிங் ராவ் மற்றும் டிபிசிசி தலைவர் பி. மகேஷ் குமார் கவுட் ஆகியோரை எம்எல்சிகளாக கடந்த மாதம் கட்சி தேர்வு செய்தது. அந்த வரிசையில், அனில் குமார் யாதவுக்கு ராஜ்யசபா வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் தலைவராக அனில் குமார் யாதவ் இருந்தார். முந்தைய பிஆர்எஸ் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், கட்சி அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. ஆதம் சந்தோஷ் குமாருக்கு வாய்ப்பளித்தது. தற்போது, செகந்திராபாத் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக அனில் குமார் யாதவ் பதவி வகித்து வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ரேணுகா சவுத்ரி ஆக்ரோஷமிக்க தலைவராக அறியப்படுபவர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அலற் விடும் இவர், 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறப்பட்ட ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சமீபத்தில் கூட போராட்டம்ன் ஒன்றின் போது, போலீஸ் எஸ்.ஐயின் சட்டையை பிடித்து வாக்குவாதம் செய்ததாக சர்ச்சையில் சிக்கினார்.

ராஜ்யசபா தேர்தல்: பாஜகவில் நேற்று இணைந்த அசோக் சவானுக்கு வாய்ப்பு!

ஆந்திராவை சேர்ந்த ரேணுகா சவுத்ரி, 1984ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1986ஆம் ஆண்டு முதல் 1998 வரை தொடர்ச்சியாக இரண்டு முறை தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும், அக்கட்சியின் தலைமை கொறடாவாகவும் பணியாற்றிய ரேணுகா சவுத்ரி, 1997 முதல் 1998 வரை தேவேகவுடா அமைச்சரவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

1998ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், 1999 மற்றும் 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கம்மம் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றார். ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் முதல் ஆட்சி காலத்தில் 2004ஆம் ஆண்டு சுற்றுலாத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்த அவர், 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்தார். 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த அவருக்கு செய்தித் தொடர்பாளர் பொறுப்பளித்த காங்கிரஸ் மேலிடம், 2012 முதல் 2018 வரை தெலங்கானாவில் இருந்து அவரை ராஜ்யசபாவிற்கு அனுப்பியது.

அபுதாபி இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி: ஆரத்தி வழிபாடு!

இந்த நிலையில், ரேணுகா சவுத்ரியை மீண்டும் ராஜ்யசபாவிற்கு காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது. இதன் மூலம், கம்மம் மக்களவை தொகுதிக்கான போட்டியை அக்கட்சி குறைத்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

எனவே, எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்பதால், கம்மம் தொகுதியை ஏராளமான சீனியர்கள் குறி வைத்துள்ளனர். அதில் ஒருவர் ரேணுகா சவுத்ரி. துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்காவின் மனைவி நந்தினி மல்லு,   அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டியின் சகோதரர் பொங்குலேடி பிரசாத் ரெட்டி, ரேணுகா சௌத்ரி ஆகியோர் கம்மம் மக்களவைத் தொகுதியை கேட்டு காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், ரேணுகா சவுத்ரியை ராஜ்யசபாவிற்கு அனுப்பி போட்டியை குறைத்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.

click me!