ராஜ்யசபா தேர்தலில் பாஜகவில் நேற்று இணைந்த அசோக் சவானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக வருகிற 27 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்து வருகிறது. அதன்படி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் நேற்று இணைந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் அவர் போட்டியிடுகிறார்.
மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்தும், தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகன் மத்தியப்பிரதேசத்தில் இருந்தும் போட்டியிட உள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழலற்ற ஆட்சி உலகிற்கு தேவை: துபாயில் பிரதமர் மோடி பேச்சு!
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் அசோன் சவான் இணைந்தார். பாஜகவில் இணைந்தது தன்னுடைய தனிப்பட்ட முடிவு எனவும், பாஜகவில்தான் எதிர்காலம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஷங்கர்ராவ் சவானின் மகனான, அசோக் சவானுக்கு நான்டெட் பகுதியில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அவரது இந்த மாற்றம் வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. மேலும், பாஜகவில் இணைந்துள்ள அசோக் சவானுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.