மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘தில்லுமுல்லு’ மாநிலங்கள் அவையில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள்...

First Published Apr 5, 2017, 7:15 PM IST
Highlights
Rajya Sabha Congress demands Electronic Voting Machine use be stopped immediately


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்து, பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு சாதகமாக வாக்குகள் விழும் வகையில் திருத்தம் செய்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி மாநிலங்கள் அவையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றும், அதற்கு அவையின் துணைத்தலைவர் பி.ஜே. குரியன் அனுமதி மறுத்துவிட்டார்.

ஒத்திவைப்பு தீர்மானம்

மாநிலங்கள் அவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி எம்.பி.கள் விதி 267ன் கீழ் 4 நோட்டீஸ் அளித்து இருந்தனர். மாநிலங்கள் அவையில் நேற்றைய அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த ‘தில்லு முல்லு’ குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர கோரினர்.  ஆனால், இதற்கு  ஆளும் கட்சி எம்.பி.கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் அமளி

பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசுகையில், “ ஆளும் மத்திய அரசு மோசடி அரசு’ என குற்றம்சாட்டினார்.  இதற்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் எம்.பி.கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து ‘ மோசடி மத்தியஅரசு’ என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். 

ஒத்திவைப்பு

மாயாவதிக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ்,  சதீஸ் மிஸ்ரா ஆகியோரும் குரல் எழுப்பி பேசினர். இதனால், சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, அவையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

வாக்குவாதம்

அதன்பின் அவை கூடியபின் பதில் அளித்த அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘ மாயாவதி நாட்டு மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கிறார்’ என்று தெரிவித்தார். 

இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி எம்.பி.களும் எதிர்க்கட்சி எம்.பி.களும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தனர். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இடையே கடும் வாக்குவாதங்கள் எழுந்தன.

எதிர்காதது ஏன்?

அமைச்சர் நக்வி பேசுகையில், ‘ கடந்த 2004, 2009ம் ஆண்டு பீகார், பஞ்சாப், டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளது. அப்போது இதே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மூலமே தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்?’ என்றார்.

அதற்கு பதிலடி கொடுத்து பேசிய குலாம் நபி ஆசாத், ‘ காங்கிரஸ் தலைமையிலான அரசில் வாக்குப்பதிவு எந்திரங்களை திருத்தவில்லை. ஆனால், இப்போது பா.ஜனதா ஆட்சியில் எந்திரங்களில் தில்லுமுல்லு வேலை செய்து திருத்தப்பட்டுள்ளது’ என்றார்.

திருத்தம்

காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் பேசுகையில், ‘ மத்தியப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன், சில வாக்குப்பதிவு எந்திரத்தை சோதனை செய்தபோது, அதில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது பா.ஜனதாவுக்கு வாக்கு விழும் வகையில்  திருத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.  ஆதலால், அடுத்து வரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கொண்டு வர வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

நேரத்தை வீணாக்காதீர்கள்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துப் பேசுகையில், “ வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான திருத்தமும் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், தேர்தல் ஆணையத்தை அனுகலாம். நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணாக்க வேண்டாம்’ என்றார்.

வாக்குச்சீட்டு முறை

காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத் பேசுகையில், “ நியாயமான, சுதந்திரமான தேர்தல்தான் ஜனநாயகத்தின் அடித்தளம். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த முறை வாக்குப்பதிவு எந்திரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்துவரும் மத்தியப் பிரதேச இடைத்தேர்தல், இமாச்சலப் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குச்சீட்டுக்களை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும்’ என்றார்.

இதையடுத்து பேசிய அவையின் துணைத்தலைவர் குரியன், “இந்த விசயத்தை எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் எந்திரம் முறையாக செயல்படுகிறதா? என்பதை சோதிப்பார்கள். நாடாளுமன்றம் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தெரிவித்தார்.

click me!