
மும்பையில் ‘ஓலா டாக்சி’யில் பயணம் செய்த இளைஞருக்கு ரூ.149 கோடி பில் தொகை வந்ததால், அவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
சமூக வலைதளத்தில் இந்த செய்தி பெரும் வைரலாகப் பரவியது. ஏப்ரல் 1-ந்தேதி நடந்ததால், முட்டாள்தின பதிவு என பார்த்தவர்கள் நினைத்து விட்டார்கள்.
ஆனால், பாதிக்கப்பட்ட இளைஞர் ஓலா டாக்சியின் பில் தொகையை ‘ஸ்கீரீன்ஷாட்’ எடுத்து வெளியிட்ட பின் தான் நம்பினார்கள்.
மும்பையைச் சேர்ந்தவர் சுஷில் நர்சியான். இவர் கடந்த 1-ந்தேதியன்று,மும்பையின் முலுந்த் வெஸ்ட் பகுதியில் இருந்து வகோலா மார்க்கெட் பகுதிக்கு செல்ல ஓலா டாக்சி முன்பதிவு செய்து இருந்தார்.
ஆனால், டாக்சிடிரைவருக்கு இவரின் வீடு தெரியாததால், குறிப்பிட்ட இடத்தில் நிற்கச் சொல்லி பின் டாக்சியில் சுஷில் நர்சியான் பயணம் செய்தார்.
இந்நிலையில், குறிப்பிட்ட இடத்துக்கு சென்றும் சுஷில் நர்சியான் செல்போனுக்கு ஓலா நிறுவனம் அனுப்பிய பில் கட்டணத்தை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
ஏனென்றால், ஏறக்குறைய 2 கிலோ மீட்டர் தூரம் டாக்சியில் பயணம் செய்தவருக்கு ரூ. 149 கோடியை 10 லட்சத்து 51 ஆயிரத்து 648 கட்டணமாக விதிக்கப்பட்டு இருந்தது.
மேலும், ஓலா நிறுவனத்தின் வாலட்டில் சுஷில் நர்சியான் செலுத்திய இந்த தொலைவுக்கான கட்டணமான ரூ.127 தொகையும் எடுக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு சுஷில் கேட்டபோது அவர்கள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்று கூறி மன்னிப்பு கோரினர்.
இது குறித்து டுவிட்டரில் சுஷில் நர்சியான் வௌியிட்ட கருத்தில், “ நான் பயணம் செய்த சிறிய அளவு தொலைவுக்கு, எனக்கு ஓலா நிறுவனம் விதித்த கட்டணத்தைப் பாருங்கள்’’ எனத் தெரிவித்து இருந்தார்.