
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அசராமல் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்து வருவதால், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசார், உதவியாளர்கள், அதிகாரிகள் பலர் தூக்கமில்லாமல் தவிப்பதாக புலம்புகிறார்கள்.
முதல்வர் ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு முதல்வராக கோரக்பூர் எம்.பி.யும், மடாதிபதியுமான யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றுள்ளார்.
இவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். வருகிறார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 27-ந்தேதி முதல்வராக பதவி ஏற்கும்போதே பேசிய ஆதித்யநாத், அரசு அதிகாரிகள் யார் 18 முதல் 20 மணி நேரம் வேலைபார்க்க தயாராக இருக்கிறார்களோ அவர்கள் என்னுடன் இருக்கலாம் என்றார்.
ஆனால், முதல்வர் ஆதித்யநாத் அப்போது விளையாட்டுக்குதான் சொல்கிறார் என அதிகாரிகள் நினைத்து இருந்தனர். ஆனால், உண்மையிலேயே,ஆதித்யநாத் நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் அலுவலகத்தில் இருந்து வேலை செய்து வருவதைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு வருகிறார்கள்.
இது குறித்து முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ நாங்கள் இது போல் கடினமான பணியை இதற்கு முன் செய்தது இல்லை. இதுபோல் முதல்வரையும் பார்த்தது இல்லை.
போலீசார், அமைச்சர்கள், செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் என அனைவரும் முதல்வர் அலுவலக்தில் நாள்தோறும் காத்திருக்கிறோம்.
இதற்கு முன் இருந்த முதல்வர்களான முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் இதுபோல் அதிக நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து நாங்கள் பார்த்தது இல்லை.
கடந்த 1989-90ம் ஆண்டில் அயோத்தி பிரச்சினை நடக்கும் போது, முலாயம்சிங் யாதவ் நடு இரவு வரை அதிகாரிகள், போலீசாருடன் நாள்தோறும் ஆலோசனை நடத்துவார்.
அதற்கு அடுத்து வந்த மாயாவதியும், அகிலேஷ் யாதவும் குறிப்பிட்ட நேரத்துக்கு பின் தங்கள் இல்லத்தில் இருந்தே பணியாற்றினார்கள். ஆனால், இப்போது பொறுப்பு ஏற்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் 18 மணிநேரம் முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்கிறார்.
இதனால், உடல் நலக்குறைவுடன் இருக்கும் அதிகாரிகள் குறித்த நேரத்துக்கு உணவு, மருந்து, மாத்திரைகள் சாப்பிட முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
உண்மையில் மிகவும் கடினமான முதல்ராக ஆதித்யநாத் இருக்கிறார். இதுபோல் கஷ்டமாக எப்போதும் வேலை பார்த்தது இல்லை என புலம்புகிறார்கள் ’’ எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும், அமைச்சர்களுக்கும் விதிமுறைகளையும், ஒழுக்க நெறிகளையும்புகுத்தி, சிம்மசொப்பனமாக ஆதித்யநாத் திகழ்ந்து வருகிறார். அமைச்சரவைக் கூட்டத்துக்கு மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சர் அனுபமாஜெய்ஸ்வதி தாமதமாக வந்தார்.
அவரை எச்சரித்த முதல்வர் ஆதித்யநாத், இனிமேல் இதுபோல் தாமதமாக வரக்கூடாது என்றார். மேலும், தாமதமாக வந்த அனைத்து அமைச்சர்களுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் அமைச்சர்களும் ஆடிப்போய் இருக்கிறார்கள்.
இதற்கிடையே பள்ளி விடுமுறை நாட்களில், மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி, ‘உலகத் தலைவர்கள், இந்தியத் தலைவர்கள், புகழ்பெற்ற நபர்கள் ஆகியோர் குறித்த கதைகள், தகவல்கள் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஆதித்யநாத்உத்தரவிட்டுள்ளார்.