
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமும் வெவ்வேறு விதமாக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், நேற்று முன்தினம் ஒரு பக்கம் மீசை, ஒரு பக்கம் தாடியை மழித்து நூதன முறையில் போராடினர். இதை தொடர்ந்து நேற்று விவசாயிகள் போராட்ட குழுவை சேர்ந்த சிலர் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23வது நாளான இன்று, பிரதமர் மோடியின் மவுனம் கலைய வேண்டும். மோடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்தபடி கை, கால்களை கட்டி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் உருண்டு புரண்டு விவசாயிகள் பேராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, எங்களது பல்வேறு கோரிக்கைகளை அனைத்து கட்சியினரும் ஏற்று கொண்டனர். ஆனால் பிரதமர் மோடி இதுபற்றி எந்த அக்கறையும் கொள்ளவில்லை. இதுவரை எங்களிடம் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.
எங்களை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. போராடியே எங்கள் உயிர் போவதற்கு முன் மோடிக்கு நல்ல புத்தியை ஆண்டவன் கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வரம் கேட்கிறோம் என்றனர்.