
பாரதிய ஜனதா ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்கள்,முன்னாள் முதல்வர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்காக மத்தியஅரசு ஏவி விடுகிறது என்று மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டன.
நோட்டீஸ்
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அமைப்புகளை ஏவி அரசியலுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவையின் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, இந்த விசயத்தை 267-வது பிரிவின் கீழ் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்தன.
மறுப்பு
ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் மறுத்துவிட்டார். இதனால், அவையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
2முறை ஒத்திவைப்பு
இதனால், துணைத்தலைவர் பி.ஜே.குரியன் அவையை 10 நிமிடங்கள் ஒத்தி வைத்தார். பின் அவை மீண்டும் கூடியதும், மீண்டும் இதே பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பியதால் மீண்டும் அவை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசியல் காரணங்கள்
பின் அவை கூடியதும் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசினார். அவர் பேசுகையில், “ அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. அமைப்புகளை மத்திய அரசு அப்பட்டமாக அரசியல் காரணங்களுக்காக, முன்னாள் முதல்வர்கள் மீதும், பா.ஜனதா ஆளாத மாநில முதல்வர்கள் மீதும் ஏவிவிடுகிறது. அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கி, சம்மன் அனுப்பியுள்ளது.
பாதுகாக்கிறது
மத்திய அரசு தங்களின் சொந்த கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் செய்யும் தவறுகளை வெளியில் தெரியாமல் பாதுகாக்கிறது. அவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றம், சொந்தங்களுக்கு பதவி அளித்தல், ஊழல் குற்றச்சாட்டுகளை செய்தாலும் அவர்களை அமலாக்கப்பிரிவு கண்டுகொள்வதில்லை.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு நாளிதழ் நிறுவனத்துக்கும், ஹரியானாவில் பதஞ்சலி நிறுவனத்துக்கு நிலம் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டது. அனைத்தும் வர்த்தகரீதியாக இப்போது பயன்படுத்தப்படுகின்றன.
பழிவாங்கல்
ஆனால், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவுகளை அரசியல் பழிவாங்கலுக்காக மத்திய அரசு பயன்படுக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம், பா.ஜனதா ஆளும் மாநிலம் ஆகியவற்றில் பயன்படுத்த இருவகையான சட்டங்களை மத்திய அரசு வைத்துள்ளது’’ என்று பேசினார்.
மீண்டும் அமளி
இதையடுத்து துணைத்தலைவர் பி.ஜே. குரியன்,பேசுகையில், “ முதல்வர்கள் தவறு செய்தால், அந்தந்த சட்டசபைகளில் விவாதிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் அல்ல. கேள்விநேரத்துக்கு அடுத்து வரும் நேரத்தில் விவாதிக்க 11 நோட்டீஸ்கள் இருக்கின்றன’’ என்றார்.
இதை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.