
மகாபாரதத்தில் துருயோதனன் ஆட்சிக்கு வர அவரின் தந்தை திருதிராஷ்டிரா எப்படி உதவினாரோ?அதுபோல், பாரதிய ஜனதா கட்சி தேர்தல்களில் வெற்றி பெற தலைமை தேர்தல் ஆணையம் உதவி வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லுமுல்லு
சமீபத்தில் நடந்த 5 மாநிலச் சட்டபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், அந்த கட்சி 2-ம் இடத்தையே பிடித்தது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும்பாரதிய ஜனதா கட்சி தில்லுமுல்லு செய்துள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
ஆணையம் மறுப்பு
இதற்கு பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை யாரும் திருத்த முடியாது. அதை தயாரித்தவர்கள் கூட தயாரிப்பு நேரத்தில் அதில் தில்லமுல்லு ஏதும் செய்ய முடியாது. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனத் தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தனது இல்லத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
விசாரிக்க மறுக்கிறது
தேர்தல் ஆணையத்தின் நோக்கமே, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எல்லாம், பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற வைப்பது தான். அதனால், நாங்கள் கூறும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ராஜஸ்தான் தோல்புரில் நடந்த இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக ஊடகங்களில் ெசய்திகள் வெளியாகின.
மாகாபாரதத்தில் துருயோதனன் ஆட்சிக்கு வர அவரின் தந்தை திருதிராஷ்டிரா எப்படி உதவினாரோஅதுபோல், தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல்களில் வெற்றி பெற உதவி வருகிறது.
சகிக்கமாட்டார்கள்
பாரதிய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையும், ஜனநாயகத்தை கையில் எடுத்து விளையாடுகிறார்கள். மக்கள் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்திருந்தால், தேர்தல் நடத்துவதை நிறுத்த வேண்டும். பிறகு தேர்தல் நடத்தி என்ன பயன்?. தில்லுமுல்லு நடந்துள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் தயாராக இல்லை.
இப்படித்தான் வெற்றியா?
பாரதிய ஜனதா வெற்றிக்கு ஒவ்வொரு முறையும் தில்லுமுல்லு நடந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது? மற்ற கட்சிக்கு இந்த எந்திரங்கள் ஏன் வழங்கப்படுவதில்லை. ஏனென்றால் மின்னணு எந்திரங்களில் உள்ள மென்பொருள் மாற்றப்படுகிறது.
டெல்லி தேர்தல்
2006-ம் ஆண்டுக்கு முந்தைய மின்னணு எந்திரங்கள், 2006-க்கு பிந்தியது, 2013ம் ஆணடுக்கு பிந்தியது என 3 தலைமுறை மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துகிறோம். வருகின்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் 2006ம் ஆண்டுக்கு முந்தைய எந்திரங்களை பயன்படுத்தி தில்லு முல்லு செய்ய திட்டமிட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.