தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்? விளக்கம் அளித்தார் ராஜ்நாத் சிங்!!

By Narendran SFirst Published Jan 18, 2022, 3:29 PM IST
Highlights

தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அலங்கார ஊர்தியில் இருக்கும் வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார் ஆகியோர் பிரபலமில்லாத தலைவர்கள் எனவும், அவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்பதாலும் நிராகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு நாள் விழா அணி வகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தியில், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், தேசிய அளவில் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இல்லை என்று கூறி தமிழக அரசின் அலங்கார ஊர்தி, அணிவகுப்பில் பங்கேற்கும் மாநிலங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில், குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்க தமிழகம் உள்பட 29 மாநிலங்களிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. முதல் இரண்டு சுற்றில் தகுதிபெற்ற தமிழக ஊர்தி மூன்றாவது சுற்றில் இறுதி 12 ஊர்திகளின் பட்டியலில் இடம்பெறவில்லை. மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே குடியரசு நாள் விழாவிற்கு ஊர்திகள் தேர்வு செய்யப்படுகின்றது. முன்னதாக தமிழக அரசுத் தரப்பில் கடந்த 2017, 2019, 2020, 2021ஆம் ஆண்டு குடியரசு நாள் விழா அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் பங்குபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!