
பாகிஸ்தானுடனான பதற்றம் நீடித்துவருவதை அடுத்து, எல்லையோர பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் மேலும் அதிகரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் உரியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 7 முகாம்கள் அழிக்கப்பட்டு 35 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்திய எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினர், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, தீவிரவாதிகளின் ஊடுருவலையும் முறியடித்து வருகின்றனர்.
இதனிடையே, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், Pulwama மாவட்டம் Tumlahal பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் ஆயுதங்களை தீவிரவாதிகள் பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடி தீவிரவாதிகளை பிடிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்தினர்.
பின்னர் ராணுவ அதிகாரிகளிடையே பேசிய திரு.ராஜ்நாத் சிங் எல்லைப் பகுதிகளில் Flodd light பொருத்துதல், பாதுகாப்பு வேலிக்கு இணையான சாலைகள் அமைத்தல் போன்றவற்றை அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.