
ஜெயின் மதக் கோட்பாட்டின்படி, ஐதராபாதில் 68 நாட்கள் உண்ணா நோன்பு இருந்த 13-வயது சிறுமி உயிரிழந்தார். இது தொடர்பாக, குழந்தைகள் உரிமை அமைப்பு புகார் செய்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜீவசமாதி
ஜெயின் மத வழக்கத்தின்படி, வயது மூத்தவர்கள் உணவு, நீர் அருந்தாமல் வடக்கே நோன்பு இருந்து உயிர் நீத்தல் அல்லது ஜீவ சமாதி அடைவது மரபாகும். ஆனால், இத்தகைய வழியில் உயிரை மாய்த்துக் கொள்ள சட்டம் அனுமதிப்பதில்லை.
8-ம் வகுப்புசிறுமி
ஐதராபாத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் ஆராதனா (வயது13) என்ற சிறுமி 68 நாட்கள் உண்ணா நோன்பு இருக்க தீர்மானித்தார். இந்த சிறுமியின் தந்தை செகந்திராபாத்தில் உள்ள பாட் பஜார் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார்.
இதையடுத்து மணப்பெண் போல அலங்காரம் செய்யப்பட்ட அராதானா கடந்த 68 நாட்களுக்கு முன் தனது நோன்பை தொடங்கினார். இந்த நோன்பின் காலம் 10 வாரங்களை நெருங்கியபோது, நாளேடுகளிலும், ஊடகங்களிலும் விளம்பரங்கள் வெளியாகின. ஜெயின் சமூகப்படி 68 நாட்கள் 68 மந்திரங்களைக் கூறி நோன்பிருப்பது புனிதமாகும்.
சிகிச்சை
தெலங்கானா அமைச்சர் பத்ம ராவ் கவுட் முன்னிலையில் ஆராதானா தனது 68 நாள் உண்ணா நோன்பை முடித்தார். இந்நிலையில், கடந்த 2-ந் தேதி மாலையில்ஆராதானாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் 3-ந்தேதி அதிகாலை ஆராதானா உயிரிழந்தார்.
புகார்
இந்த விஷயம் அறிந்த நகரில் உள்ள குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் தலைவர் அனுராதா ராவ் (‘பாலல ஹக்குலா சங்கம்’) ஐதராபாத் போலீசாரிடம் சிறுமியின் மர்மமான இறப்பு, உரிமைகள் மீறல் குறித்தும் புகார் அளித்தார். மேலும், ஆராதனாவின் குடும்பத்தினரும், ஜைன சமூகத்தினரும் நோன்பு இருக்கக் கூறி கட்டாயப்படுத்தியுள்ளனர் எனவும் புகாரில் தெரிவித்தார்.
விசாரணை
இந்த புகார் குறித்து ஐதராபாத் போலீஸ் துணை ஆணையர் பி.சுமதி கூறுகையில், “ நோன்பு முடிந்த 2 நாட்களுக்கு பின் நீர் உணவுகள் ஆராதனாவுக்குவழங்கப்பட்டு இருக்கிறது. 3-ம் நாள் ஆராதனாவின் ரத்த அழுத்தம் குறையத் தொடங்கியதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஆதாரங்கள் ஏதும் கிடைத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் '' எனத் தெரிவித்தார்.
செல்பி
இதற்கிடையே ஆராதானாவின் தாத்தா மானேக்சந்த் சாம்தாரியா கூறுகையில், “ ஆராதானா உண்ணா நோன்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். அவளுடன் பலரும் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இப்போது அவள் இறந்தவுடன் நாங்கள் தான் உண்ணா நோன்பு இருக்கக்கூறியதாக எங்களை குற்றம்சாட்டுகிறார்கள் '' எனத் தெரிவித்தார்.