
4 பெண்களின் நெற்றியில் ‘திருடி’ என்று பச்சை குத்திய பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் 3 பேர், 23 ஆண்டுகளுக்கு பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
ஜேப்படி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலில், கடந்த 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி ஜேப்படியில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அந்த பெண்கள் முறையே குர்தேவ் கவுர், பரமேஸ்ரி தேவி, மொகிந்தர் கவுர் மற்றும் ஜஸ்விந்தர் கவுர் ஆகும்.
இவர்கள் 4 பேர் மீதும் ‘பிக் பாக்கெட்’ வழக்குகள் பல நிலுவையில் இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களின் நெற்றியில் அனைவருக்கும் தெரியும் வகையில் திருடி (பிக் பாக்கெட்) என்று பச்சை குத்தினர். இந்த வழக்கின் விசாரணைக்காக பெண்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
குற்றச்சாட்டு
அப்போது அந்த பெண்கள் நீதிபதி முன்னிலையில் தங்களது முகத்தில் போர்த்தியிருந்த முக்காடுகளை நீக்கி இந்த கொடூரத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினர். இச்சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்து சென்றனர்.
இந்த நிலையில் அந்த பெண்கள் நீதிமன்றத்தில், தாங்கள் திருட்டு தொழிலில் ஈடுபடவில்லை எனவும், வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த எங்களை போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து வந்து ‘பிக்பாக்கெட்’ என்று நெற்றியில் பச்சை குத்தினர் என்றும் வாக்குமூலத்தில் கூறினர்.
வழக்கு
மேலும் இச்சம்பவத்தால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நீதி வேண்டும் எனவும், தங்களின் நெற்றியில் ஆறாத வடுவாக உள்ள ‘திருடி’ என பொருள் கொண்ட பச்சையை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்க வேண்டும் எனவும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையில் இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து எடுத்தது. இதையடுத்து பஞ்சாப் மாநில அரசு, அமிர்தசரஸ் நகர போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பியது. மேலும் மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியது.
3 ஆண்டு கடுங்காவல்
இந்த நிலையில் வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றது. வழக்கின் விசாரணை கடந்த 23 ஆண்டுகளாக பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு சுக்தேவ் சிங் சின்னா, சப்-இன்ஸ்பெக்டர் நரிந்தர் சிங் மாலி, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பாக் ஆகியோரின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆனது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பல்ஜிந்தர் சிங், சுக்தேவ் சிங் சின்னா மற்றும் நரிந்தர் சிங் மாலி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். மற்றொரு குற்றவாளியான கன்வல்ஜித் சிங்க்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.