விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன்: ராஜஸ்தான் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

By Manikanda Prabu  |  First Published Nov 21, 2023, 4:07 PM IST

ராஜஸ்தான் மாநிலத் தேர்தலையொட்டி பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது


மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இரு முனைப்போட்டி நிலவி வரும் நிலையில், பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள மாநில கட்சி அலுவலகத்தில, ராஜஸ்தானின் காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, முதல்வர் அசோக் கெலாட், அம்மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா, தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் சி.பி. ஜோஷி மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோரால் 'ஜன் கோஷ்னா பத்ரா' எனப்படும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

Tap to resize

Latest Videos

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி விவசாயிகளுக்கு 2 லட்சம் வட்டியில்லா கடன், விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி வந்தால், 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும் எனவும், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும். இதனை 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.30 லட்சம் கோடியாக உயர்த்துவதே இலக்கு என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

டீப் ஃபேக்குகளுக்கு எதிராக புதிய சட்டம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

தேர்தல் வெளியீட்டு விழாவில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம்.” என்றார். முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், “ராஜஸ்தானின் நிதி நிலைமையை நாங்கள் நிர்வகித்த விதத்தை கண்டு மாநில மக்கள் பெருமிதம் கொள்வார்கள். ராஜஸ்தானில் தனிநபர் வருமானம் 46.48 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்குள் தனிநபர் வருவாயில் முதலிடத்தை பெறுவது என்பது எங்களின் கனவு. 2020-21 ஆம் ஆண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 19.50 ஐ எட்டியது, இது இந்த பத்தாண்டுகளில் மிக அதிகம்.” என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில மக்களுக்கு ஏழு உத்தரவாதங்களை முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 கவுரவத் தொகை, 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500 விலையில் எல்.பி.ஜி. சிலிண்டர், கால்நடை வளர்ப்பவர்களிடம் இருந்து சாணம் கிலோ ரூ.2க்கு வாங்குதல், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான சட்டம், அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட், இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வரை காப்பீடு, ஆங்கில வழியில் பள்ளிக் கல்வி என 7 உத்தரவாதங்களை அவர் அளித்திருந்தார்.

அதேபோல், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை மையமாக வைத்து பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பாஜகவும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!