
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் உள்ளனர். இவர்கள் வசித்து வரும் ஆளுநர் மாளிகை ராஜ் பவன் என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்து வரும் நிலையில், ராஜ் பவன் சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்து ஆளுநர்களின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஆர்.என்.ரவி, ராஜ் பவன் என அழைக்கப்படும் ஆளுநர் மாளிகைகளின் பெயரை மாற்றும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
ராஜ் பவன் என்பது ராஜாக்கள் வசிக்கும் மாளிகையை குறிப்பிடுவதுபோல் உள்ளது. ஆளுநர்கள் ராஜாக்கள் இல்லை. நாங்கள் மக்கள் சேவகர்கள். ஆகவே இந்தியாவில் ஆளுநர்கள் மாளிகைகளில் பெயரை லோக் பவன் (மக்கள் பவன்) என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கைய ஏற்ற மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ் பவன் என்று இருந்த ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை மக்கள் பவன் (லோக் பவன்) என மாற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகவே இனிமேல் ஆளுநர் மாளிகைகள் ராஜ் பவன் என்பதற்கு பதிலாக மக்கள் பவன் (லோக் பவன்) என்று அழைக்கப்படும். கிண்டி ஆளுநர் மாளிகை இனிமேல் மக்கள் பவன் என்றே அழைக்கப்படும்.