தனிமைப்படுத்தும் அறைகளாகும் ரயில்பெட்டிகள்... கொரோனா தீவிரத்தைச் சமாளிக்க மத்திய அரசு அதிரடி முடிவு!

By Asianet TamilFirst Published Mar 28, 2020, 8:24 PM IST
Highlights

 ரயில்வேக்கு சொந்தமான ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்களுக்கான இருக்கைகள், கழிவறைகள், கைகழுவும் இடம் என ரயில் பெட்டிகள்  மருத்துவமனையில் உள்ளதைப் போல உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் அதைச் சமாளிக்கும் வகையில், ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் அறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
உலகையே பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ்,  இந்தியாவிலும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை 933 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 84 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் அதன் தீவிரமாக அது பரவி வருவதால், இந்தியாவிலும் அதுபோன்ற நிலைமை ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை பாதிப்பு அதிகரித்தால், அதைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நோயாளிகளை அவசர காலத்தில் தனிமைப்படுத்தும் சிகிச்சைக்காக ரயில் பெட்டிகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரயில்வேக்கு சொந்தமான ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்களுக்கான இருக்கைகள், கழிவறைகள், கைகழுவும் இடம் என ரயில் பெட்டிகள்  மருத்துவமனையில் உள்ளதைப் போல உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டி மருத்துவ வசதிகள் குறைந்த அஸ்ஸாம் மாநிலத்துக்கு முதலில் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் ஓய்வுபெற்ற, தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரோனா சிகிச்சையளிக்க அழைப்பு விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

click me!