பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது - ராகுல் காந்தி கணிப்பு!

By Manikanda PrabuFirst Published Apr 17, 2024, 2:15 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கணித்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தம்ழிநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் அம்மாநிலம் காஜியாபாத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “கடந்த 15, 20 நாட்களுக்கு முன்பு வரையில் பாஜக 180 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கணித்திருந்தேன். பொதுவாக, இந்தக் கணிப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் தற்போதைய நிலவரங்களின்படி, பாஜகவால் 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.” என்றார்.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். தேர்தல் பத்திரங்கள் கொள்ளையடிப்பதற்குத்தான் என தொழில் அதிபர்களுக்கு தெரியும் என்ற ராகுல் காந்தி, ஊழலின் சாம்பியனாக மோடி இருக்கிறார் என குற்றம் சாட்டினார். வெளிப்படைத் தன்மைக்காகவே தேர்தல் பத்திரங்கள் முறை கொண்டுவரப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். அப்படியென்றால், அந்த அமைப்பை உச்ச நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது? எனவும் ராகுல் காந்தி கேள்வி ஏழுப்பினார். பாஜகவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள்? அவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்? எனவும் சரமாரியான கேள்விகளை அவர் எழுப்பினார்.

செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியை விமர்சித்த ராகுல் காந்தி, அந்த பேட்டி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது எனவும், அந்த நிகழ்ச்சி தோல்வியடைந்த ஒரு நிகழ்ச்சி எனவும் சாடினார்.

“பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அதானி போன்றவர்களை ஆதரித்தது, வேலைவாய்ப்புகளை குறைத்தது போன்றவற்றால் அனைத்து தரப்பினரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நாட்டில் மீண்டும் வேலைவாய்ப்பை வலுப்படுத்துவதே எங்களின் முதல் வேலையாக இருக்கும்.” என ராகுல் காந்தி உறுதியளித்தார்.

நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்: முதல்வர் ஸ்டாலின்!

வறுமையை ஒரேடியாக ஒழிக்கும் காங்கிரஸின் திட்டத்தை மோடி விமர்சித்ததற்கு பதிலளித்த ராகுல் காந்தி, வறுமையை ஒரேடியாக ஒழித்துவிட முடியாது என்று யாரும் கூறவில்லை, ஆனால் அதற்கான வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்திய கூட்டணிதான் தேர்தலில் புதிய நம்பிக்கை, ராகுல் காந்தி கூறியது போல் தங்களது தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிக்க பல விஷயங்கள் உள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறினார். பயிர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் எனவும் அகிலேஷ் யாதவ் கூறினார். பாஜகவுக்கு பிரமாண்டமான பிரியாவிடை வழங்கப்படும் என்று கூறிய அகிலேஷ் யாதவ், “மக்களவைத் தேர்தலில் ஒரு ஓட்டு கூட பிரிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.

click me!