ராகுல் பிரதமர் வேட்பாளர்! பின்வாங்கிய ஸ்டாலின்!! காரணம் மம்தா?

By Selva KathirFirst Published Jan 21, 2019, 11:14 AM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பின்வாங்கியதன் பின்னணியி மம்தா பானர்ஜி உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பின்வாங்கியதன் பின்னணியி மம்தா பானர்ஜி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தேசிய அளவில் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். ஆனால் இதனை காங்கிரஸ் கட்சி கூட வழிமொழியவில்லை. தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் ஸ்டாலின் அவசரப்பட்டுவிட்டதாக கருத்து தெரிவித்தன. இதனால் ஏன் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தேன் என்று விளக்கமாக ஒரு அறிக்கையை கூட வெளியிட்டார் ஸ்டாலின். 

ஆனாலும் கூட பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ஸ்டாலின் அவசரப்பட்டுவிட்டார் என்பது தான் இறுதியான முடிவாகிவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் மறந்தும் கூட ராகுல் காந்தி பெயரை உச்சரிக்கவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்றும், இந்தியாவின் பிரச்சனையை தீர்க்க வல்ல ஒரே தலைவர் ராகுல் என்கிற ரீதியில் ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் ராகுல் காந்தியை பற்றியோ, பிரதமர் வேட்பாளர் பற்றியோ வாய்திறக்கவில்லை. 

ஸ்டாலினின் இந்த பேச்சும் விமர்சனத்திற்கு ஆளானது. ராகுல் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை ஸ்டாலின் மாற்றிக் கொண்டதாக உடனடியாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் சென்னை அருகே சோழிங்க நல்லூரியில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து ராகுல் காந்தியை தமிழகத்தில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததாக தெரிவித்தார். ஆனால் மேற்கு வங்க அரசியல் சூழல் வேறு மாதிரி உள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் 22 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றன. 

மேற்கு வங்கத்தை பொறுத்தவரை தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்யும் சூழல் நிலவுகிறது. அதனால் அங்கு பிரதமர் வேட்பாளர் குறித்து பேசவில்லை. இவ்வாறு ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். ஸ்டாலினின் இந்த விளக்கமும் கூட சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழகத்திற்கு ஒரு பிரதமர் வேட்பாளர், மேற்கு வங்கத்திற்கு ஒரு பிரதமர் வேட்பாளர் என்கிற நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுத்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இதனிடையே பொதுக்கூட்டம் நடைபெற்றதற்கு முதல் நாள் அனைத்து கட்சி தலைவர்களுடனும் மம்தா தனித்தனியாக பேசியுள்ளார். அப்போது பிரதமர் வேட்பாளர் என்கிற கான்செப்டே வேண்டாம் என்று ஸ்டாலினிடம் மம்தா கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் பா.ஜ.க – காங்கிரசை பொறுத்தவரை இரண்ட கட்சிகளும் மேல்மட்ட அளவில் சர்வாதிகார போக்கு கொண்டவை தான். எனவே தேர்தலுக்கு பிறகு பிரதமர் தேர்வு செய்வது தான் சரியானதாக இருக்கும், தற்போதே ராகுலை உயர்த்தி பிடித்தால் நம்முடைய முக்கியத்துவத்தை நாம் இழக்க நேரிடும் என்றும் மம்தா ஸ்டாலினிடம் சொன்னதாக சொல்லப்படுகிறது.

இவைகள் அனைத்தையுமே பொதுக்கூட்டத்தின் போது ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட வேண்டாம் என்று நேரடியாக கூறாமல் மறைமுகமாக மம்தாவே ஸ்டாலினிடம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தி.மு.கவுடன் மற்ற அனைத்து பிராந்திய கட்சிகளும் வேறுபட்டு நிற்பது கொல்கத்தா கூட்டத்தில் நிரூபணம் ஆகியுள்ளது.

click me!