மோடிக்கு அமோக ஆதரவு... புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!

By Asianet TamilFirst Published Jan 20, 2019, 4:17 PM IST
Highlights

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியை மட்டும் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவில் அதிக தொகுதிகளை பாஜக வெல்லும் எனப் புதியக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நியூஸ் ஏஜென்சிகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் சார்பில் தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நியூஸ் நேஷன்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. டெல்லி, ஹரியானாவில் உள்ள 17 தொகுதிகளில் இந்தக் கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஹரியானாவில் நரேந்திர மோடி ஆட்சியின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று 44 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 42 சதவீதம் பேர் நரேந்திர மோடி ஆட்சியின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். வரும் தேர்தலில் ஹரியானாவில் பாஜக 30 சதவீத ஓட்டுகளையும் காங்கிரஸ் 29 சதவீத ஓட்டுகளையும் பெறும் எனக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் பாஜக 5 தொகுதிகளையும் காங்கிரஸ் 3 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல டெல்லியில் நரேந்திர மோடி ஆட்சியின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று 49 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 31 சதவீதம் பேர் மட்டுமே செயல்பாடுகளில் திருப்தி அடைவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். 49 சதவீதம் பேர் மோடி ஆட்சியில் திருப்தி இல்லை என்று தெரிவித்திருந்தபோதும் 39 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆம் ஆத்மி கட்சிக்கு 31 சதவீதம் பேரும் வாக்களிக்கப் போவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்திருக்கிறார்கள். 

இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியை மட்டும் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு கட்சிகளுமே கூட்டணியில்லை என்று பரஸ்பரம் அறிவித்துவிட்ட நிலையில் டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அந்தப் பலனை பாஜக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

click me!