ஆரஞ்சு பழ ஜாம் செய்து அசத்திய ராகுல் காந்தி: தாய் சோனியாவுடன் நெகிழ்ச்சி சம்பவம்!

By Manikanda Prabu  |  First Published Jan 1, 2024, 3:25 PM IST

மர்மலாட் எனப்படும் ஆரஞ்சுப் பழப் பாகில் இருந்து ஜாம் செய்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அசத்தியுள்ளார்


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அன்றாட நடவடிக்கைகளை அவரது யூ-டியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புத்தாண்டை முன்னிட்டு, அவரது தாயார் சோனியா காந்தியுடன் மர்மலாட் எனப்படும் ஆரஞ்சுப் பழப் பாகில் இருந்து ராகுல் ஜாம் செய்யும் வீடியோ அவரது யூ-டியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சோனியா, ராகுல் காந்தி ஆகிய இருவரும் அவர்களது தோட்டத்துக்குச் சென்று சிறிய ஆரஞ்சுப் பழங்களை பறிக்கின்றனர். அவற்றை கூடையில் நிரப்பும் அவர்கள், பின்னர் சமையல் அறைக்கு சென்று ஆரஞ்சுப் பழத்தை உரித்து சாறு எடுக்கின்றனர். அதிலிருந்து, மர்மலாட் எனப்படும் ஆரஞ்சுப் பழப் பாகில் இருந்து செய்யப்படும் ஜாமை அவர்கள் தயாரிக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

மர்மலாட் ஜாம் செய்முறை தனது சகோதரி பிரியங்காவினுடையது எனவும், அவர் சொன்ன செய்முறையை பயன்படுத்தி அதனை செய்வதாகவும் ராகுல் காந்தி குறிப்பிடுகிறார். அப்போது பேசும் ராகுல் காந்தி, பாஜகவினருக்கு இந்த ஜாம் கிடைக்கும் என்கிறார். அதற்கு, அவர்கள் அதை நம்மீது எறிந்துவிடுவார்கள் என சோனியா காந்தி பதிலளிக்கிறார். அதனால் என்ன, மீண்டும் பழங்களை பறிப்போம் என சொல்லி இருவரும் சிரிக்கின்றனர்.

ராகுலிடம் வருத்தப்படும் விஷயம் என்னவென்ற கேள்விக்கு பதிலளிக்கும் சோனியா காந்தி, அவர் தன்னை போலவே பிடிவாத குணம்மிக்கவர் என்கிறார். ராகுலிடம் பிடித்த விஷயம் எதுவென்ற கேள்விக்கு, அவரது பாசமும், அக்கறையும் மிகவும் பிடிக்கும் என சோனியா பதிலளிக்கிறார். தான் மருத்துவமனையில் இருந்தபோது, பிரியங்காவும், சோனியாவும் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டதாகவும் சோனியா கூறுகிறார்.

உங்களது வீட்டில் சிறந்த சமையலர் யார் என்ற கேள்விக்கு தனது தாய் சோனியாதான் என ராகுல் பதிலளிக்கிறார். தங்களது காஷ்மீர் உறவினர்களிடம் இருந்து சமையலில் ஏராளமான விஷயங்களை அவர் கற்றுக் கொண்டதாகவும் ராகுல் அந்த வீடியோவில் கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் சோனியா காந்தி, இப்போது உலகின் பல இடங்களில் இந்திய உணவகங்கள் உள்ளன. முன்பு அப்படி கிடையாது. இந்தியர்கள் வெளிநாடு சென்றால் அங்குள்ள உணவு வகைகளுக்கு ஒத்துபோவது கடினமாக இருக்கும். அதேபோல், தனக்கும் இங்கு வந்த போது இங்குள்ள உணவு வகைகளுடன் ஒத்து போவதற்கு நாட்கள் எடுத்தன. தற்போது அனைத்தும் பழகி விட்டது. இப்போது, வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா திரும்பியதும் உடனடியாக பருப்பும், அரிசியும் வைத்து உணவு சமைத்து சாப்பிடுவேன் எனவும் சோனியா காந்தி கூறுகிறார்.

மர்மலாட் ஆரஞ்சு ஜாம் தயாரான பிறகு சோனியாவும், ராகுலும் சேர்ந்து கண்ணாடிக் குடுவைகளில் அதை நிரப்புகின்றனர். அந்தக் குடுவைகளின் மேல், “சோனியா மற்றும் ராகுலிடமிருந்து அன்புடன்” என்று எழுதப்பட்டுள்ளது.

click me!