காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார்
வன்முறையால் பாதிக்கப்பட்டு போர்க்களமாக காட்சியளிக்கும் மணிப்பூர் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செல்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் காந்தி மணிப்பூர் புறப்பட்டு சென்றார். இன்றும் நாளையும் மணிப்பூரில் இருக்கும் ராகுல் காந்தி, இன மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களை நிவாரண முகாம்களில் சந்தித்து பேசவுள்ளார் எனவும், சிவில் சமூக அமைப்புகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் மே 3ஆம் தேதி வன்முறை வெடித்த பிறகு, அம்மாநிலத்துக்கு ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறவும் உள்ளார்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் செல்லும் ராகுல் காந்தி, அங்கிருந்து சுராசந்த்பூர் மாவட்டத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் நிவாரண முகாம்களைப் பார்வையிடும் அவர், பின்னர், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங்கிற்குச் சென்று இடம் பெயர்ந்தவர்களுடன் உரையாடுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமூக நல்லிணக்கம்: பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து!
இம்பாலில் உள்ள நிவாரண முகாம்களுக்கு நாளை செல்லும் ராகுல் காந்தி, சில சிவில் சமூக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் வன்முறை களமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் ராகுல் காந்தியின் இந்த பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ராகுலின் பயணம் அரசியல் சந்தர்ப்பவாதம் என பாஜக சாடியுள்ளது.
முன்னதாக, மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்தது. வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டுமே இந்த கூட்டம் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முன்னதாக, மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மணிப்பூர் கலவர பூமியாக காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.