
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை மத்தியில் ஆளும் பாஜக அழிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளாசியுள்ளார்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான பால், தயிர், பனீர், அரிசி, கோதுமை, கோதுமை மாவு ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதி்க்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்புக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலை உயரக்கூடிய பொருட்கள் பட்டியல், எவ்வளவு சதவீதம் உயர்வு என்பது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் தேன், பனீர், வெல்லம், கோதுமை ஆகியவற்றுக்கு இப்போது வரிவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக நுகரும் இந்தப் பொருட்களுக்கு முன்பு வரியில்லை.
அவர் கூறுகையில் “உயர்ந்த வரிகள், வேலைவாய்ப்பு இல்லை. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை எவ்வாறு அழிப்பதுதான் பாஜகவின் சிறப்பு” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து கண்டித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு மக்களை மூச்சுத்திணறவைக்கிறது. பெரும்பாலான இந்தியர்கள் பொருளாதாரச் சிரமங்களைச் சந்தித்துவரும் நிலையில், இந்த வரி உயர்வு பொறுப்பற்றது. பணவீக்கம் ஏற்கெனவே சாமானியர்களின் ஊதியத்தை சாப்பிட்டுவரும் நிலையில் இந்த வரி உயர்வு அவர்களுக்கும் மேலும் சுமையாக மாறும். எதிலாவது தப்பிக்க முடியும் என்று அரசு நம்புகிறதா?” எனத் தெரிவித்துள்ளார்.