பங்குச்சந்தையில் ஊழல்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

By Manikanda PrabuFirst Published Jun 6, 2024, 7:32 PM IST
Highlights

தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு அதன் மூலம் பங்குச்சந்தையில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

முன்னதாக, கடந்த 1ஆம் தேதி மாலை வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என கணித்திருந்தன. இதனால், ஜூன் 3ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் 700 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றம் கண்டன. ஆனால், தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு எதிர்மாறாக வந்த போது, பங்குச்சந்தைகள் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன. அதன்பிறகு தற்போது சாதாரணமாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Latest Videos

இந்த நிலையில், தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு அதன் மூலம் பங்குச்சந்தையில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட வைத்து அதன்மூலம் பங்குச்சந்தைகளை ஏற்றியும் இறக்கியும் செய்து இது குறித்த விவரங்களை முன்கூட்டியே சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் வெளியிட்டு இதன் மூலமாக ஊழலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என மிகப் பெரிய குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன் வைத்துள்ளார்

பங்குச்சந்தையில் முறைகேடு நடந்துள்ளது. ஜூன் 4க்குள் பங்குகளை வாங்கும்படி மே 13ஆம் தேதி அமித்ஷா கூறினார். பிரதமர் நரேந்திர மோடியும் பங்குச்சந்தையை குறித்து பேசி உள்ளார். கருத்துக்கணிப்புக்கு பிறகு தான் இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன. முடிவுக்குப் பிறகு சரிந்தன. பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, போலியான கருத்து கணிப்புகளை நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஏர்போர்ட்டில் நடந்த தாக்குதல்: கங்கனா ரனாவத் விளக்கம்!

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் பங்குச் சந்தைகள் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இரண்டு முறை பேசினார். ஜூன் 4 ஆம் தேதிக்கு முன் மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என்று மே 13ஆம் தேதியன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, மே 19, 29 ஆகிய தேதிகளில் பங்குச் சந்தைகள் சாதனைகளை முறியடிக்கும் என்றார். மே 31 அன்று நடந்த வர்த்தகத்தின் அளவைப் பார்த்தால், அசாதாரண செயல்பாட்டைக் காணலாம். பின்னர் ஊடகங்கள் ஜூன் 1 ஆம் தேதி ஒரு போலி கருத்துக்கணிப்பை வெளியிடுகின்றன. மறுநாள் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. தேர்தல் முடிவுகளின் போது, அவை வீழ்ந்தன. இதன் மூலம், 5 கோடி சில்லறை முதலீட்டாளர்கள், ரூ.30 லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளனர். இதில், பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி, காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

click me!