காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “அது எப்படி மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை தங்கள் பின்னால் வைத்திருக்கின்றனர்” என விமர்சித்தார். லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருந்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றம், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த அம்மாநில உயர் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உம்மன் சாண்டி உடல் 20ஆம் தேதி நல்லடக்கம்: கேரள அரசு பொது விடுமுறை அறிவிப்பு!
குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவதூறு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த அந்த மனுவில், “இந்த தண்டனை உத்தரவு சுதந்திரமான பேச்சு, சுதந்திரமான கருத்து, சுதந்திரமான சிந்தனை மற்றும் சுதந்திரமான கருத்து ஆகியவற்றைத் தடுக்க வழிவகுக்கும்; இது இந்தியாவின் அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் ராகுல் காந்தி தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, அவதூறு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீடு வழக்கு மீதான விசாரணை வருகிற 21ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி அவதூறு வழக்கில் புகார்தாரரான புர்னேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது கருத்துக்களை கேட்காமல் வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அவர் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.