பிரதமர் மோடி, அதானி ஆகியோரை மறைமுகமாக பிக்பாக்கெட்டுகளுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வருகிற 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ளது. இரு கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாறிமாறி ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் கவுதம் அதானியையும் பிக்பாக்கெட்டுகளுடன் ஒப்பிட்டுப் பேசினார். ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “பிக்பாக்கெட்டுகள் எப்போதும் தனியாக வருவதில்லை. அவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவாக வருகிறார்கள். ஒருவர் பாதிக்கப்பட்டவரின் கவனத்தை திசை திருப்பும்போது, மற்றொருவர் பின்னாலில் இருந்து பாக்கெட்டை வெட்டி விடுவார்.” என்றார்.
இதனை சொல்லி முடித்த உடனேயே, “மக்களின் கவனத்தை திசை திருப்ப தொலைகாட்சியில் பிரதமர் மோடி முன்பக்கத்தில் வருகிறார். பிறகு, அதானி பின்னால் வந்து பணத்தை எடுக்கிறார்.” என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
தேர்தலுக்கு பிறகு எனது பங்கை கட்சி மேலிடம் முடிவு செய்யும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!
“பிக்பாக்கெட்காரர்கள் தனியாக வருவதில்லை. அவர் தனியாக வந்தால் உங்கள் பாக்கெட்டை வெட்ட முடியாது. மூன்று பேர் கொண்ட குழுவாக வருவார்கள். ஒருவர் முன்பக்கமும், ஒருவர் பின்புறமும், மற்றொருவர் தூரத்திலிம் இருப்பார்கள். முன்னால் வருபவர் உங்கள் கவனத்தைத் திசைதிருப்புவார், உங்கள் மனம் திசைதிருப்பப்பட்டவுடன், பின்னால் வந்த இரண்டா நபர் பிளேடைப் பயன்படுத்தி உங்கள் பாக்கெட்டை வெட்டுவார். ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் இருவரையும் எச்சரிக்க மூன்றாவது நபர் மக்களை கண்காணிப்பார்.” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “உங்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வேலை. அவர் முன்னிருந்து தொலைக்காட்சியில் தோன்றி இந்து-முஸ்லிம், பணமதிப்பிழப்பு அல்லது ஜிஎஸ்டி போன்ற விஷயங்களை எழுப்பி பொதுமக்களை திசை திருப்புகிறார். இதற்கிடையில், அதானி பின்னால் வந்து பணத்தை எடுக்கிறார். இருவருக்கும் இடையில் யாராவது வருகிறார்களா என தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அமித் ஷா, அப்படி வந்தால் அவர்களை தடியடி நடத்தி அடிப்பார்.” என்று ராகுல் காந்தி சாடினார்.
ராஜஸ்தான் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப் பேசுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, இந்தியாவின் உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, பிரதமர் மோடியை panauti என்று அதாவது அபசகுனம் பிடித்தவர் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி மறைமுகமாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.