தேர்தலுக்கு பிறகு எனது பங்கை கட்சி மேலிடம் முடிவு செய்யும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!

By Manikanda Prabu  |  First Published Nov 22, 2023, 4:22 PM IST

தேர்தலுக்கு பிறகு எனது பங்கை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்


மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானதால், அந்த தொகுதிக்கான தேர்தல் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இரு முனைப்போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்சி முடிந்த பின்னரும் ஆட்சிக்கு எதிரான மனநிலையே அம்மாநில மக்களிடம் உருவாவது வழக்கமாக உள்ளது. 1998ஆம் ஆண்டு முதல் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. ஒரே கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வரலாறு அம்மாநிலத்தில் கிடையாது.

Latest Videos

undefined

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும், பாஜக 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி, சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் முதல்வராக பொறுப்பேற்றார். சச்சின் பைலர் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

முன்னதாக, முதல்வர் பதவியை கைபற்றுவதற்காக அசோக் கெல்லாட், சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அசோக் கெல்லாட்டுக்கு முதல்வர் பதவியை கட்சி மேலிடம் அளித்தது. சச்சின் பைலட் துணை முதல்வரானார். இருப்பினும், அவர்கள் இருவருக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரின் விளைவாக சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், காங்கிரஸ் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கினர். தொடர்ந்து அப்பிரச்சினை முடித்து வைக்கப்பட்டது.

ஆனாலும் கூட, அவர்கள் இருவருக்கும் இடையே தற்போதும் புகைந்து கொண்டிருப்பதாக அம்மாநில அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதே இப்போதைக்கு முதன்மை விஷயம் என்பதால், இரு தரப்பும் அமைதியாக இருப்பதாக தெரிகிறது.

பயிர் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க விவசாயிகளுக்கு நிதியுதவி: உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு எனது பங்கை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் எனவும், அதற்கு நான் கட்டுப்பட்டவன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனது பங்கை எப்போதுமே கட்சி மேலிடம்தான் தீர்மானிக்கும். நான் தீர்மானிப்பதில்லை. கட்சி மேலிடம் அளிக்கும் பங்கை நான் கடைப்பிடிப்பேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்காது எனவும், பெரும்பான்மையாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். “இந்த முறை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் அமைக்க மக்கள் தங்கள் மனநிலையை உருவாக்கியுள்ளனர். நாங்கள் 156 இடங்களில் வெற்றி பெறுவோம் என நான் நம்புகிறேன். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கத்தை மாற்றும் பாரம்பரியம் இந்த முறை உடையப் போகிறது. எங்களது பணியால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமையும் என்பது உறுதி.” என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

click me!