காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை என்பதால், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பையே நடத்ததாத மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இருப்பினும், மாநில அரசுகள் விரும்பினால் அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறிவிட்டது. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேசமயம், நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலின் போது தாங்கள் வெற்றி பெற்றால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
நாக்பூரில் கட்சியின் 139aஅவது நிறுவன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பேசிய ராகுல் காந்தி, 2024 தேர்தலில் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார். ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியினருக்கு பல துறைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தன்னை ஓபிசி என்று வர்ணித்துக் கொள்வார். ஆனால் என்னுடைய கோரிக்கைக்குப் பிறகு (சாதிக் கணக்கெடுப்பு), ஏழைகள் என்ற ஒரே சாதிதான் இருக்கிறது என்கிறார். ஒரே சாதி என்றால், நீங்கள் ஏன் உங்களை ஓபிசி என்று சொல்லிக் கொள்கிறீர்கள்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சாதியினருக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வோம். ஒன்று ஏழைகளுக்கு மற்றொன்று பணக்காரர்களுக்கு என எங்களுக்கு இரண்டு இந்துஸ்தான்கள் வேண்டாம்.” என ராகுல் காந்தி கூறினார்.
இளைஞர்களுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை. மாறாக, இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத் தாக்குதல்: உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரும் டெல்லி போலீசார்!
“இளைஞர்களுக்கு வேலை இல்லை, அதனால் சமூக வலைதளங்களை ஸ்க்ரோலிங் செய்வதில் 7-8 மணி நேரம் வீணடிக்கிறார்கள். நிலைமை மோசமாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணியால் மட்டுமே அவர்களுக்கு வேலை கொடுக்க முடியும்.” என்றும் ராகுல் காந்தி கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க குறைந்தபட்ச வருமான ஆதரவு திட்டமான ‘நியாய்’ ( NYAY) திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். “நாக்பூரில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன, ஒன்று அம்பேத்கரின் முற்போக்கு மற்றும் மற்றொன்று தேசத்தை அழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.” எனவும் கார்கே அப்போது சாடினார்.