நிலக்கரி முறைகேட்டில் கவுதம் அதானியை பிரதமர் மோடி பாதுகாப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலை கொடுத்ததால் மின்சார விலை உயர்வுக்கு வழிவகுத்தது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் இருந்து வெளியாகும் தி ஃபைனான்சியல் டைம்ஸ் இதழ் வெளியிட்ட கட்டுரையை மேற்கோள்காட்டி, அதானி குழுமம் மக்களிடமிருந்து மொத்தம் ரூ.32,000 கோடியை பறித்து சென்றுள்ளதாக ராகுல் காந்தி பகிரங்கமான குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி இந்தியாவில் பலமடங்காக அதானி குழுமம் விற்பனை செய்வதாக கூறினார், “கவுதம் அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறார். அது இந்தியாவை அடையும் நேரத்தில், அதன் விலை இரட்டிப்பாகும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் பைகளில் இருந்து சுமார் ரூ.32,000 கோடி அவர் எடுத்துள்ளார்.” என்று ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
undefined
கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் மின்சாரத்திற்கு மானியம் வழங்கியது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மத்தியப் பிரதேசத்திலும் அதைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதானியின் முறைகேட்டால்தான் பொதுமக்களின் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கிறது என்பதை நுகர்வோர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற பிரிட்டிஷ் செய்தித்தாள், பைனான்சியல் டைம்ஸ், ‘அதானி மற்றும் மர்மமான நிலக்கரி விலைகள்’ என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த பிரச்சினை இந்தியாவில் விவாதிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அதானி ஏழை மக்களிடம் பணத்தை எடுத்துக் கொள்கிறார். இது நேரடி திருட்டு. இது எந்த அரசாங்கத்தையும் வீழ்த்தும். பிரதமர் மோடியால் அதானி மீண்டும் மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் ஏன் கருத்து தெரிவிப்பதில்லை என எனக்கு புரியவில்லை. அதானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசு ஹேப்பி நியூஸ்!
பிரதமர் மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளதாக தெரிவித்த ராகுல் காந்தி, “இந்தியாவின் அனைத்து துறைகளிலும் உள்ள இந்திய குடிமக்களின் வருமானமும் அதானிக்கு பங்காக சென்று கொண்டிருக்கிறது. அதற்கு, பிரதமர் மோடி துணை நின்று கொண்டிருக்கிறார். அதானி குழுமத்தின் நிலக்கரி முறைகேட்டால் மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் முறைகேடுகளை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மக்களின் நம்பகத்தன்மையை இழந்து கொண்டு வருகிறார். இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு போன்றவற்றால் பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது.” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
முன்னதாக, பைனான்சியல் டைம்ஸ் நிறுவனம் தங்களது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.