"பாஜகவை உ.பியை விட்டே துரத்துவோம்" : ராகுல் - அகிலேஷ் கூட்டு சபதம்

 
Published : Feb 04, 2017, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"பாஜகவை உ.பியை விட்டே துரத்துவோம்" : ராகுல் - அகிலேஷ் கூட்டு சபதம்

சுருக்கம்

12 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராகுலும் அகிலேஷும் இணைந்து நடத்திய ஊர்வலம், உற்சாகம் மிகுந்த தொண்டர்கள் எழுச்சியால் ஆக்ரா நகரை ஸ்தம்பிக்க வைத்தது. ‘‘பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் உ.பியை விட்டு வெளியேற்றுவோம்’’ என, ராகுல் காந்தி சபதம் ஏற்றார்.

கூட்டாக பிரசாரம்

உத்தரப்பிரதேச தேர்தலில், ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி, பா.ஜனதா மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சிகளை மிரள வைத்துள்ளது.

கூட்டணி அமைந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றம் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், மாநில முதல்-அமைச்சருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் இணைந்து தலைநகர் கூட்டாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

எழுச்சி ஊர்வலம்

இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததுடன், நகரின் மக்கள் நெருக்கம் மிகுந்த பிரமாண்ட பிரசார ஊர்வலத்தையும் நடத்தினார்கள். இதற்கிடையில், நேற்று முன்தினம் ஆக்ராவில் அதே போன்ற எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது.

பா.ஜனதா கட்சிக்கு செல்வாக்கு மிக்க தொகுதியான வடக்கு ஆக்ராவின் தயாள்பாக்கில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் ராகுல் மற்றும் அகிலேஷ் பங்கேற்றனர். தொண்டர்களின் உற்சாக கோஷத்துடன் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற இந்த ஊர்வலம் ஆக்ரா நகரை ஸ்தம்பிக்க வைத்தது.

விஷம் கக்கும்..

பிரசாரத்தின்போது பேசிய அகிலேஷ் யாதவ், எதிர்க்கட்சிகள் மீது குறிப்பாக பா.ஜனதாவை கடுமையாக தாக்கினார். ‘‘அவர்கள் (பா.ஜனதா), இந்த நாட்டையும் நாட்டின் அரசியலையும் மோசடி செய்துவிட்டதாக’’ அவர் குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் பேசுகையில், ‘‘பா.ஜனதா தலைவர்கள் எப்போது பேசினாலும், விஷத்தை கக்கி வருகிறார்கள். வளர்ச்சித்திட்டங்கள் மூலம் நானும், ராகுல்ஜியும், இந்த ‘வெறுப்பு அரசியலை’ முறியடிக்க விரும்புகிறோம். காங்கிரசும் சமாஜ்வாதியும் இணைந்து உ.பி.யில் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி இந்த நாட்டின் அரசியலின் பாதையை மாற்றி அமைக்கும். எங்களுடைய மன உறுதிக்கு வலிமை சேர்த்த ராகுலுக்கு நன்றி’’ என்று கூறினார்.

பா.ஜனதாவை வெளியேற்ற

‘‘பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் மாநிலத்தில் இருந்து வெளியேற்றுவோம்’’ என்று சபதம் ஏற்ற ராகுல் காந்தி, ‘‘நான் சகோதரத்துவம் பற்றி பேச விரும்புகிறேன். ஆனால், பா.ஜனதா வெறுப்புணர்வையே பரப்பி வருகிறது. மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. மக்களை ஒன்றுபடுத்த காங்கிரசும் சமாஜ்வாதியும் உழைத்து வருகிறது’’ என்றார்.

‘‘இரு கட்சிகளின் கூட்டணி தற்போது மாநில அளவில்தான் உள்ளது. ஆனால், வருகிற தேர்தல்களில் இந்த கூட்டணி மேலும் வளரும்’’ என்றும், இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

அகிலேஷுக்கு ராகுல் புகழாரம்

பிரசாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, உ.பி.யில் அகிலேஷ் யாதவின் வளர்ச்சித்திட்டங்களை பாராட்டி அவருக்கு புகழாரம் சூட்டினார்.

அவர் பேசும்போது, ‘‘இன்று, இரு இளைஞர்களான நானும் அகிலேஷ்ஜியும், உ.பி. மாநில வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து இருக்கிறோம்.

உ.பி.யில் புதிய ஆட்சி அமைந்ததும், நாங்கள் நிறைவேற்ற இருக்கும் திட்டங்களினால், இது உ.பி. மாநிலம்தானா... என வியக்கும் வண்ணம், இந்த மாநிலத்தை மாற்றிக்காட்டுவோம்.

அகிலேஷ் சிறப்பாக பணியாற்றி வருகிறார். உ.பி. மாநிலத்திற்காக, தனது இதயப்பூர்வ அர்ப்பணிப்பை அவர் செலுத்தி வருகிறார்’’ என்று பாராட்டினார்

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்