
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள கைராணாவில் இந்துக்கள் வெளியேற்றப்படுவது, இந்துப் பெண்களை காதலித்து மதம் மாறச் செய்யும் ‘லவ் ஜிகாத்’ ஆகிய விஷயங்கள் தேர்தலில் முக்கிய துருப்புச் சீட்டுக்களாக எங்களுக்கு இருக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யா நாத் தெரிவித்தார்.
சர்ச்சை எம்.பி.
உத்தரப்பிரதேசத்தின் கோராக்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத். சர்ச்சைக்குறிய கருத்துக்களை அடிக்கடிவௌியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஆதித்யாநாத், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்று சமீபத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், உத்தரப் பிரேதசத்தில் மேற்குப்பகுதியில் ஷாமினி மாவட்டம், கைராணா பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் வெளியேறி உள்ளனர்.
இது குறித்து தற்போது யோகி ஆதித்யாநாத் பேசி உள்ளார். அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
மற்றொரு காஷ்மீரா
ஷாமினி மாவட்டம், கைராணா பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டில் காஷ்மீரில் பண்டிட் இந்துக்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினரால் வெளியேற்றப்பட்டார்களோ அதுபோல் இங்கும் நடக்கிறது. கைராணாவை மற்றொரு காஷ்மீராக மாற அனுமதிக்க மாட்டோம்.
முக்கியப் பிரச்சினைகள்
இந்த தேர்தலில், கைராணா இந்துக்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம், இந்துப் பெண்கள் காதலித்து திருமணம் செய்து மதமாற்றம் செய்யும்லவ் ஜிகாத், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக இருக்கும்.
நான் இன்றைய நிலையைப் பற்றி பேசவில்லை. எதிர்காலத்தை குறித்து பேசுகிறேன். இந்துக்கள் வெளியேற்றம் என்பது எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை. மீண்டும் காஷ்மீர் கைரானாவில் உருவாகவிட மாட்டோம்.
பாதுகாப்பு
உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
தனிக்குழுக்கள்
இந்துப் பெண்கள் திருமணம் செய்து மதமாற்றம் செய்யும் ‘லவ் ஜிகாத்’ தேர்தலில் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும். இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்புவோம். பெண்களுக்கு தொந்தரவு செய்யும் அந்த நபர்களைப் பிடிக்க தனிக்குழுக்கள் அமைத்து, பெண்களின் மரியாதையை பாதுகாப்போம்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் கூட செல்லமுடியாது. எங்களின் குழுக்கள், அங்கு பெண்களின் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் துணை நிற்கும்.
மதச்சார்பற்ற நிலை
இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தில், சிறுபான்மையினரை நினைத்து முதல்வர் அகிலேஷ் யாதவ் கவலை கொள்கிறார். அவர்களுக்காக திட்டங்களை அறிவிக்கிறார். பெரும்பான்மை சமூகத்துக்கு எதிராகப் பேசுவதையே மதச்சார்பற்ற நிலை என்று நினைத்து நாட்டில் உள்ள சில அரசியல் கட்சித்தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
ஆட்சிக்கு வந்தால்
உத்தரப்பிரதேச அரசு கல்லறைகளுக்கு இடம் கொடுக்கிறது, ஆனால், எரியூட்டும் இடத்துக்கு இடம் கொடுப்பதில்லை. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சித் திட்டங்களை சாதி, மதம் பாகுபாடு இல்லாம் செய்யும். பாரதிய ஜனதா அரசு மக்களுக்கான அரசாக, அனைவருக்குமான அரசாக இருக்கும்.
முதல்வர் வேட்பாளர்..
உத்தரப்பிரதேசத்தில் நான் முதல்வராக வருவேனா? என்பது பிரச்சினை அல்ல. பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்க வேண்டும். என்னைக் கூட்டிலும் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அனைவரும் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.