
ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக ரூபாய் நோட்டுவிவகாரம் தொடர்பாக மத்தியஅரசு வெள்ளை அறிக்கை வௌிட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த அறிவிப்பு வெளியான போது 50 நாட்கள் மக்கள் பொறுமை காக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்த நாட்கள் நாளையுடன் முடிய இருக்கும் நிலையில் ராகுல் காந்தி நேற்று பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அது குறித்து ராகுல் காந்தி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது-
1. ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ந்தேதிக்கு முன், ரூ.25 லட்சம் அதற்கு மேல் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.
2. நவம்பர் 8-ந் தேதிக்கு பின், கருப்புபணம் எவ்வளவு பிடிபட்டுள்ளது, அதன் மதிப்பு எவ்வளவு?
3. ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு எவ்வளவு?
4. செல்லாத ரூபாய் அறிவிப்பை வெளியிடும் முன், பிரதமர் மோடி யாருடன் இது குறித்து கலந்து ஆலோசித்தார்?
5. அப்படி கலந்து ஆலோசித்தால் அவர்கள் யார், அவர்கள் பெயர்கள் என்ன?
6 ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உயிரிழந்தவர்கள் பட்டியலை தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு ஏதேனும் கொடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அவர் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்
1.. ரூபாய் நோட்டு உத்தரவால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும்.
2. மகாத்மா காந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பயனாளிகள் எத்தனை நாள் பணியாற்றி இருக்கிறார்களோ அந்த நாளின் ஊதியத்தை இரட்டிப்பாகத் தர வேண்டும்.
3. வருமான வரி, விற்பனைவரி செலுத்துவோருக்கு 50 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும்.
4. ராபி பருவம் செய்யும் விவசாயிகளுக்கு 20சதவீதம் போனாக கடன் தொகையில் வழங்க வேண்டும்.
5. வங்கிகள்,ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
6. வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் வட்டி வழங்க வேண்டும்.
7. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் விலக்கிக்கொள்ளப் பட வேண்டும்.
8. நவம்பர் 8-ந் தேதிக்கு பின், யாரெல்லாம் வேலை இழந்துள்ளார்களோ அவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கெஜ்ரிவாலைத் தொடர்ந்து ராகுல்..
ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டபோது, பாரதியஜனதா கட்சி தனக்கு நெருங்கியவர்களிடம் முன்கூட்டியை கூறி பணத்தை டெபாசிட்செய்ய உதவி செய்தது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். அதை அடிப்படையாக வைத்து, நவம்பர் 8-ந்தேதிக்கு முன் ரூ. 25 லட்சம் , அதற்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை ராகுல் கேட்டுள்ளார்.