
கடனை ரத்து பண்ணணும்னா நீங்க பணக்காரராக இருக்கனும்… ராகுல் அதிரடி பேச்சு…
நரேந்திர மோடி அரசு பணக்காரர்களின் கடன்களை மட்டுமே ரத்து செய்கிறது என்றும் ஏழை விவசாயிகளின் கடன்கள் அவரது கண்களுக்கு தெரியவில்லை எனவும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டசபைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின், துணைத் தலைவர் ராகுல்காந்தி , சோன்பத்ரா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
அப்போது மோடி அரசிடம், விவசாயிகள் வாங்கிய 50,000 கோடி ரூபாய் கடனை ரத்து செய்ய கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால்அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு அரசு 70,000 கோடி ரூபாய் வரையில் விவசாயிகள் கடனை ரத்து செய்தது என குறிப்பிட்ட ராகுவ் காந்தி, மோடி அரசு இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் 1 கோடியே 40 லட்சம் கோடி கடனை மட்டுமே ரத்து செய்து உள்ளது என தெரிவித்தார்.
மோடி பணக்காரர்களின் கடனை மட்டுமே ரத்து செய்வார் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஏழைகள் என்றால் அவருக்கு அறவே பிடிக்காது என தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் ராகுல் குற்றம்சாட்டினார்.