அம்மா தொகுதியில் பிரியங்கா... காங்கிரஸ் வெற்றிக்காக தலைவர்கள் வியூகம்..!

By Asianet TamilFirst Published Jan 14, 2019, 11:36 AM IST
Highlights

உடல் நிலையைக் காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி மறுத்தால், ரேபரேலி தொகுதியில் பிரியாங்காவை களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது.

உடல் நிலையைக் காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி மறுத்தால், ரேபரேலி தொகுதியில் பிரியாங்காவை களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு தீவிர அரசியல் ஈடுபாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக சோனியா குறைத்து வருகிறார். அவரது உடல்நிலையும் முன்பை போல ஒத்துழைக்கவில்லை. இதனால், இந்த முறை அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு வேளை இந்த முறை சோனியா போட்டியிட விரும்பாமல் ஒதுங்கினால், அந்த இடத்தில் பிரியங்காவை களமிறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்துக்கு யோசனை தெரிவித்திருக்கிறார்கள். 

இந்திரா காந்தியின் சாயலில் இருக்கும் பிரியங்காவை அரசியலில் களம் இறக்க பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியினர் ஆசைப்பட்டு வருகிறார்கள். ஆனால், பிரியங்கா தீவிர அரசியலில் இறங்கவில்லை. தன் தாய் சோனியா, சகோதரர் ராகுல் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 

இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதால், பிரியங்காவின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கள் விருப்பத்தை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமாகத் தோல்வியடைந்ததாலும், இந்த முறை வெற்றி வெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும்,  இதுசம்பந்தமாக ராகுல் விரைவில் முடிவு எடுப்பார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள்.

click me!