முன்னாடியே பயணத்தை ரத்து செய்ய சொன்னோம்... பஞ்சாப் முதல்வர் கூறும் அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Jan 5, 2022, 9:28 PM IST
Highlights

மோசமான வானிலை, போராட்டம் காரணமாக பிரதமர் மோடியின் பயணத்தை ரத்து செய்ய ஏற்கனவே கோரியிருந்ததாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார். 

மோசமான வானிலை, போராட்டம் காரணமாக பிரதமர் மோடியின் பயணத்தை ரத்து செய்ய ஏற்கனவே கோரியிருந்ததாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ.42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டை இருந்தார். லேசான வானிலை நிலவியதால் ஹெலிகாப்டர் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்தார். பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் சாலை வழியான பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தியாகிகள் நினைவிடத்திற்கு சுமார் 30 கி.மீ தொலைவில் ஒரு மேம்பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக பிரதமரின் பயணம் சுமார் 20 நிமிடம் தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு மீறல் காரணமாக பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் விமான நிலையம் சென்ற பிரதமர், நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன். உங்கள் முதல்வருக்கு அதற்காக நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பத்திண்டா விமான நிலையத்தில் பஞ்சாப் அதிகாரிகளிடம் கூறியுள்ளாதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்  செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை.

என் செயலருக்கு கொரோனா உறுதியானதால் பிரதமரை வரவேற்க செல்ல முடியவில்லை. பிரதமர் வருகையையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நமது பிரதமருக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். அவரது பாதுகாப்பில் ஏதேனும் குறை இருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும். பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி கடைசி நேரத்தில் சாலை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஃபெரோஸ்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமர் சென்றது வருத்தம் அளிக்கிறது. நான் பாதுகாப்பு ஏற்பாடுகளை நள்ளிரவு வரை கண்காணித்துக் கொண்டிருந்தேன். 70,000 நாற்காலிகள் போடப்பட்ட பிரதமரின் பிரச்சார கூட்டத்துக்கு 700 நபர்கள் தான் வந்திருந்தனர். மோசமான வானிலை, போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்ய ஏற்கனவே கோரியிருந்தோம். பாஜக இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது என்று விளக்கம் அளித்துள்ளார். 

click me!