
புனே பல்கலைக்கழகத்தின் புதிய அறிவிப்பு ஒன்று இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே ‘கோல்ட் மெடல்’ எனும் புதிய விதிமுறையை புனே பல்கலைக்கழகம் புதிய அறிவித்துள்ளதாகக் கூறப்படுவது இப்போது பெரும் பரபரப்பாக மாணவர்களிடம் பேசப்படுகிறது
சாதாரணமாக, பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற வேண்டுமானால், தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும். அடுத்து, பல்கலைக்கழக கல்வி தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று தங்கள் தனித்திறனை வெளிப்படுத்த வேண்டும். இவைதான் ஒரு சிறந்த மாணவர்களுக்கு அவசியமானது என பொதுவான வரையறை உண்டு.
ஆனால், இப்போது புகழ்பெற்ற புனே பல்கலைக்கழகம் இதில் சில கட்டு திட்டங்களை புதிதாக வலிந்து திணிக்கவுள்ளது. அவை, பெரும்பாலான மாணவர்களால் விரும்பத்தகாத ஒரு சட்ட திட்டமாக மாறப் போகிறது. ஷெலர் மமா என்ற பெயரில் தங்கப் பதக்கத்தை அளிப்பதற்கான அடிப்படைத் தகுதியாக, பல்கலைக்கழகம் ஒரு சட்டதிட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நெறிமுறைகளின் படி, மாணவர்கள் ‘கோல்ட் மெடல்’ வாங்க வேண்டும் என்றால், அசைவம் சாப்பிடாதவராக இருக்கவேண்டும்... மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும்.
இப்படி, அசைவம் சாப்பிடாத மற்றும் மது அருந்தாத மாணவர்கள் மட்டுமே ‘மோல்ட் மெடல்’ பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இது டிவிட்டரில் பெரிதாகப் பரவியது. இதனை அடுத்து, மகாராஷ்டிர தே. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே இது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக பதிவிட்டார். அதுசரி, கல்வித் தகுதி குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லையே என்று கூறியுள்ள அவர், பல்கலைக் கழகம் தரமான கல்வியைக் குறித்து சிந்திக்க வேண்டுமே தவிர, மக்களை பிரித்தாளும் வேலையில் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளார்.
ஷெலர் மமா கோல்ட் மெடல் படி, நவ.15க்குள் மாணவர்கள் தங்களது அப்ளிகேஷன்களை அனுப்ப வேண்டும் என்று பல்கலைக் கழகம் கூறியிருந்தது.