மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக் பாட்... வீட்டுக் கடன் 3 மடங்கு அதிகரிப்பு! கணவன்-மனைவி இருவருக்கும் ‘லோன்’!

First Published Nov 10, 2017, 5:17 PM IST
Highlights
Loans up to Rs 25 lakh under HBA for govt employees


வீட்டு வசதி மற்றும் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கடன் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

இதற்கு முன் மத்திய அரசு ஊழியர் ஒருவர் அதிகபட்சமாக ஒருவர் ரூ.7.50 லட்சம் மட்டுமே கடன் பெற முடியும் என்ற நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இருவரும் கடன் பெறலாம்

மேலும், கணவன், மனைவி இருவரும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்தால், முன் யாராவது ஒருவர் மட்டும் வீட்டுக்கடன் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது மாற்றப்பட்டு, இருவரும் தனித் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கடன் பெறலாம் என்று மத்திய அரசு திருத்தியுள்ளது.

நிலையான வட்டி

அதுமட்டும் அல்லாமல், நான்கு வகையான வட்டிவீதங்கள் 6 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை விதிக்கப்பட்டு வந்தது. அதையும் மாற்றியுள்ள மத்திய அரசு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிலையாக 8.50 சதவீதம் விதிக்கப்படுகிறது.

ரூபாய் நோட்டு தடையால் ரியல் எஸ்டேட் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு  ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த சலுகையை மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கியுள்ளது.

ரூ.25 லட்சம்

இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 ஆண்டுகள் செலுத்தும் வகையில் வீட்டுக்கடன் தொகை ரூ.7.50 லட்டத்தில் இருந்து,  ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

வங்கிகளில்

வங்கிகளில் இதே ரூ.25 லட்சத்தை 20 ஆண்டுகளுக்கு கடனாகப் பெற்றால், அதற்கு 8.35 சதவீதம் வட்டி விதிக்கப்பட்டும், மாத தவனையாக ரூ.21, 459 செலுத்த வேண்டும். இதே 20 ஆண்டுகளுக்கு செலுத்தும் போது, ரூ.51.50 லட்சம் வரை வட்டியும் செலுத்த வேண்டியது இருக்கும். வட்டி மட்டும் ரூ.26.50 லட்சம் கட்ட வேண்டும். 

மாதத்தவணை குறையும்

ஆனால், இதுவே மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்கள் ரூ.25 லட்சம் கடன் பெற்றால், 8.50 சதவீத வட்டியில் 15 ஆண்டுகளுக்கு மாதத்தவணையாக ரூ.13 ஆயிரத்து 890 செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள ஆண்டுகளுக்கு ரூ.26 ஆயிரத்து 411 மாதத்தவணையாக செலுத்த வேண்டும்.

 ஒட்டுமொத்தமாக பார்த்தால், ரூ.40.84 லட்சம் மட்டுமே செலுத்துகிறோம். கூட்டுவட்டியாக ரூ.15.84 லட்சம் மட்டுமே கட்டுகிறோம். வங்கிகளைக் காட்டிலும் அரசிடம் மிகக்குறைவாகும்’’ என்று தெரிவித்தார். 

34 மாதங்கள்

இந்த வீட்டுக்கடன் திட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர் ஒருவர் தனது அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு 34 மாத ஊதியத்தை ரூ.25 லட்சம் வரை அதிகபட்சமாக கடன் பெறலாம். இந்த பணத்தை வீடு கட்டவோ, வீடு, பிளாட் வாங்கவோ பயன்படுத்தலாம். 

ரூ. ஒரு கோடி

மேலும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீட்டை விரிவுபடுத்த கடன் தொகையாக முன் ரூ.1.80 லட்சம் கடன் மட்டுமே அளிக்கப்பட்டது.  இப்போது, அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஊழியர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மட்டுமே வீடு கட்ட செலவு செய்யலாம் என்று முன்பு இருந்தது. அது 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ. ஒரு கோடி வரை செலவு செய்து வீடு கட்டலாம் அல்லது வாங்கலாம் என மாற்றப்பட்டுள்ளது.

click me!