புதுச்சேரியை புரட்டி எடுக்கும் கொரோனா... மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 19, 2021, 1:18 PM IST
Highlights

புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் கல்லூரியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை பீதியடைய வைத்துள்ளது. 

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை முன் களப்பணியாளர்கள், பொதுமக்கள் என 32  ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையை தடுக்க முயற்சிக்க வேண்டுமென முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி குறித்த உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சுகாதாரத்துறை இயக்குநர் பள்ளிகளை தற்காலிகமாக மூட பரிந்துரை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் கல்லூரியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை பீதியடைய வைத்துள்ளது. பேராசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவிகள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2 பேராசிரியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரியை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முயற்சிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 
 

click me!