"நாளை பலப்பரீட்சை..." சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கணும்...!?

First Published May 18, 2018, 11:32 AM IST
Highlights
Prove the majority in the legislative assembly ...!


கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் நன்றாக இருக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.

கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமைக்கோரி இருந்தபோதும், பாஜகவிற்கே ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், கர்நாடகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலிலும் பல்வேறு களேபரங்களுக்கும் மத்தியில் முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்த நிலையில் அவரோ பெருந்தன்மையாக 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் பதவி ஏற்புக்கு தடை விதிக்க மறுத்ததால் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றதை எதிர்க்கும் வழக்கு இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. எடியூரப்பாவை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடி வருகிறார். பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்டவிரோதம் என்றார். பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடினார். காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பொருந்தாத கூட்டணி அமைத்துள்ளதாக முகுல் ரோத்தகி வாதம் செய்தார். எம்.எல்.ஏ.க்களை சட்டவிரோதமாக காங்கிரசும், மஜத-வும் அடைத்து வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு முன்பு காங்கிரசும், மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை என்றும் கூறினார். 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள எடியூரப்பா எப்படி பெரும்பான்மை இருப்பதாக கூறுகிறார் என்று காங்கிரஸ் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் நல்லது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துளளது. யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தெரிந்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆளுநரை கேள்வி கேட்பதைவிட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதுதான் சரியாக இருக்கும்என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். தற்போது கர்நாகட சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கர்நாடக டிஜிபிக்கு உத்தரவிடுவோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜகவும் உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

click me!