
பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்து இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள பிரபல தொழிபதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தார். தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தலைமறைவாக இருந்து வரும் அவருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நாடு திரும்பவில்லை.
இந்நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கிரிமினல் நடைமுறை சட்டத்தின்படி மத்திய அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
ஏற்கனவே விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கது.