மும்பை, கேரளாவில் வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 10:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
மும்பை, கேரளாவில் வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு

சுருக்கம்

 

1000, 500 ரூபாய் மாற்ற முடியாமல் மக்கள் அவதி, பரிதவிப்பு

மும்பை, நவ. 12-

மத்திய அரசு செல்லாததாக அறிவித்த ரூ. 1000, ரூ.500 நோட்டுக்களை மாற்ற, நாடுமுழுவதும் வங்கிகள், தபால்நிலையங்கள் முன் நேற்றும்  ஆயிரக்கணக்காண மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படாதது, குறைவான அளவே பணப்பட்டுவாடா ஆகிய காரணங்களால் மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்து குழப்படைந்தனர். மும்பை, கேரளவில் கூட்டத்தில் நின்றிருந்த இருவர் விழுந்து உயிரிழந்தனர்.

செல்லாது

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ந்தேதி புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தார்.

ஒரு நாள் இடைவெளியில், மக்கள் தங்களிடம் இருக்கும் இந்த இரு ரூபாய் நோட்டுக்களையும் வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தார்.

காத்திருப்பு

அதைத்தொடர்ந்து, நேற்று முன் தினம் முதல் நாடுமுழுவதும் உள்ள வங்கிகள், தபால்நிலையங்கள் முன், ஆயிரக்கணக்கான மக்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், ஒருவருக்கு ரூ.4000 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பால் மக்கள் வங்கி கணக்குகளில் பணம் இருந்தும், அதை எடுக்க முடியாமல் மிகுந்த வேதனை அடைந்தனர்.

ஏ.டி.எம். செயல்படவில்லை

இந்நிலையில், நேற்று ஏ.டி.எம். மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என வங்கிகள் தெரிவித்ததால், மக்கள் ஓரளவுக்கு நிம்மதியுடன் இருந்தனர். ஆனால், நாடுமுழுவதும் ஏ.டி.எம்.கள் பெரும்பாலும் இயங்காததால், மக்கள் அங்கு சென்று பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். செயல்பாட்டில் இருந்த ஏ.டி.எம். களிலும் பணம் எடுக்க பாம்பு போல் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் நின்று இருந்தது. பணம் இருந்த ஏ.டி.எம்.களும் ஒரு சில மணிநேரங்களில் தீர்ந்துவிட்டனர்.

3 மணிநேரம்

இதனால், மீண்டும் மக்கள் கூட்டம் வங்கிகளுக்கே படையெடுக்கத் தொடங்கியது. இதனால், வங்கிகளில் நேற்று மீண்டும் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற நேற்று 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து புதிய நோட்டுக்களைப் பெற்றுச்சென்றனர்.

சுருண்டுவிழுந்தார்

இதில் மும்பை புறநகர் முலுந்த் பகுதியில் உள்ள நவ் நகரில் ஸ்டேட் வங்கி கிளையில் பணம் எடுக்க 73 வயதான விஸ்வநாத் வர்தாக் காத்திருந்தார். அவர் தன்னிடம் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை மாற்ற ஏறக்குறைய பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தார். ஆனால், திடீரென, மயங்கி விஸ்வநாத் சுருண்டு விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலஸ் மூலம், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாடியில் இருந்து...

இதைபோல, கேரள மாநிலம், தலசேரியைச் சேர்ந்த உன்னி என்பவர், திருவாங்கூர் வங்கியில் தன்னிடம் உள்ள ரூபாய் நோட்டை மாற்ற நேற்று சென்றார். அந்த வங்கி ஒரு மாடியின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது. அங்கு கூட்டம் கூடியிருந்ததால், வரிசையில் நின்று இருந்த உன்னி, கூட்டம் அதிகரிக்கவே, நிலைதடுமாறி மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். முதல்நாளான நேற்றுமுன்தினம் தன்னிடமுள்ள பணத்தை டெபாசிட் செய்த உன்னி, நேற்று வந்தபோது, உயிரிழந்தார்.

ஏமாற்றம்

மேலும், ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்பச்செலவுக்காக பணம் இல்லாமல், அதிகாலையிலேயே ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முயன்றனர். ஆனால், ஏ.டி.எம். இயங்காததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அவதி

கொல்கத்தாவைச் சேர்ந்த அதிதி சாஹா கூறுகையில், “ நான் நீண்ட நேரம் வரிசையில் இருந்து, ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க வந்தேன். ஆனால், நான் பணம் எடுக்க ஏ.டி.எம். சென்றபோது, பணம் இல்லை என்று வந்தது. என் குடும்பச் செலவுக்காகவும், மளிகைப் பொருட்கள் வாங்கவும்தான் பணம் இல்லாமல் தவிக்கிறேன்'' என்றார்.

சாப்பிடக்கூட...

மக்கள் படும்பாடு இப்படி இருக்கையில், வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களால் சாப்பிடக்கூட முடியாமல் தவிப்பதாகத் தெரிவித்தனர். பாட்னா நகரில் பேங்க் ஆப் இந்தியாவில் ேமலாளராக இருக்கும் எஸ்.கே. ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “ எங்கள் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வங்கிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வளிகிறது'' என்றார்.

PREV
click me!

Recommended Stories

சிலிண்டர் தட்டுப்பாடு.. உணவகங்கள் மூடல்.. வீடுகளுக்கு சிலிண்டர் பதிவதிலும் அதிரடி கட்டுப்பாடு
இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்: 21 நாட்கள் கட்டாய இடைவெளி