அம்பானி, அதானி பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன் என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலம் கரீம் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தேர்தலுக்காக அம்பானி மற்றும் அதானியிடம் காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணம் பெற்றார்கள் என்பதை காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) அறிவிக்க வேண்டும். அவர்களிடமிருந்து எவ்வளவு கறுப்புப் பணம் கிடைத்தது?” என கேள்வி எழுப்பினார். அம்பானி மற்றும் அதானியை 5 ஆண்டுகளுக்கும் மேலாக விமர்சித்த அவர், ஒரே இரவில் அவர்களை விமர்சிக்காமல் இருக்க என்ன ஒப்பந்தம் செய்து கொண்டீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமர் கோயிலுக்கு பூட்டு போட காங்கிரஸ் விரும்புகிறது: பிரதமர் மோடி!
இந்த நிலையில், அம்பானி, அதானி பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன் என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். ராகுல் காந்தி போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பல விளக்கங்களை அளித்து வருகிறார். பிரதமர் மோடி எனது சகோதரரை இளவரசர் என அழைக்கிறார். ஆனால், அவர் மன்னர். நாட்டின் மொத்த சொத்தும் சில கோடீஸ்வரர்களுக்கு கொடுக்கப்பட்டதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர் தெளிவுபடுத்துகிறார்.” என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என்ற கருத்து இன ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, “இந்த பயனற்ற பிரச்சினைகளில் பிரதமர் மோடி முழு கவனம் செலுத்தி ஃபுல் டாஸ் விளையாடி வருகிறார். வேலை வாய்ப்பு, பணவீக்கம், பெண்கள் மீதான அட்டூழியங்களை பற்றி பேசுமாறு அவருக்கு நான் சவால் விடுக்கிறேன்.” என்றார்.