ராமர் கோயிலுக்கு பூட்டு போட காங்கிரஸ் விரும்புகிறது: பிரதமர் மோடி!

By Manikanda Prabu  |  First Published May 8, 2024, 2:50 PM IST

அயோத்தி ராமர் கோயிலுக்கு பூட்டு போட காங்கிரஸ் விரும்புவதாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, குறிப்பாக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

ஆனால், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி, நடத்தை விதிகளை மீறி மத ரீதியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாக அவர் மீது எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்திலும் மோடி மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Latest Videos

undefined

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பூட்டு போட காங்கிரஸ் விரும்புவதாகவும், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் தார் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ஒப்பந்தங்களில் சிறுபான்மையினரின் பங்களிப்பை உறுதி செய்வதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, அதாவது எதிர்க்கட்சிகள் மத அடிப்படையில் ஒப்பந்தங்களை வழங்கும் என்று கூறினார்.

விளையாட்டுகளில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து காங்கிரஸ் பேசியதாகக் கூறிய அவர், கிரிக்கெட் அணியில் வீரர்களை மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புவதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோயிலுக்கு பூட்டு போட காங்கிரஸ் விரும்புவதாகவும், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். இதனை தடுக்க வேண்டுமெனில் 400 இடங்களில் பாஜகவை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறி பிரதமர் வாக்கு சேகரித்தார்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சலுகைகள் குறித்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் கருத்துக்களை விமர்சித்த பிரதமர் மோடி, இந்திய கூட்டணி SC, ST மற்றும் OBC களின் அனைத்து இடஒதுக்கீடுகளையும் பறித்து வாக்கு வங்கிக்கு கொடுக்க (முஸ்லிம்கள் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்) சதித்திட்டத்தில் ஈடுவதாக குற்றம் சாட்டினார்.

அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை காங்கிரஸ் பெற்றது? பிரதமர் மோடி கேள்வி!

மேலும், ஜவஹர்லால் நேருவுடன் ஒப்பிடும்போது, அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு மிகக் குறைவான பங்கு இருப்பதாகக் கூறி, அம்பேத்கரை காங்கிரஸ் சிறுமைப்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். “உண்மை என்னவென்றால், காங்கிரஸ் குடும்பம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை ஆழமாக வெறுக்கிறது.” என அவர் கூறினார்.

பாஜக அரசு 400 இடங்களில் வெற்றி பெற்றால் அரசியல் சட்டத்தை மாற்றும் என காங்கிரஸ் வதந்தி பரப்பி வருவதாக குற்றம்சாட்டிய மோடி, காங்கிரஸின் புத்திசாலித்தனம் அவர்களின் வாக்கு வங்கி அரசியலில் (முஸ்லிம் வாக்குகள் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்) கவனம் செலுத்துவதாக தெரிகிறது என்றார்.

click me!