
நாட்டின் பொருளாதார நிலவரம், சிக்கல்கள், திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலை அமைத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார்.
நிதி ஆயோக்கின் உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையில் செயல்படும் இந்த கவுன்சிலில், நிதி ஆயோக்கின் முதன்மை ஆலோசகர் ரத்தன் வட்டல், பொருளாதார வல்லுநர் சுர்ஜித் பல்லா, ரதின் ராய், அஷிமா கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
நாட்டின் பொருளாதார நிலவரம், திட்டங்கள், சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய புகழ்பெற்ற, மதிப்பு மிக்க பொருளாதார வல்லுநர்கள் கொண்ட 5 பேர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு பிரதமர் பரிந்துரைக்கும் திட்டம், பொருளாதார விவகாரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து, அவருக்கு ஆலோசனை வழங்கும். நாட்டின் வேலைவாய்ப்பு, தொழில்துறை உற்பத்தி, தேவை, சப்ளை, வேளாண்மை உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பிரதமரிடம் வழங்கும்.
பொருளாதாரம் சார்ந்த நாட்டில் நிலவும் எந்த ஒரு சிக்கலையும் இந்த குழு தாங்களாக எடுத்துக்கொண்டு ஆலோசனை வழங்கும். அல்லது பிரதமர் பரிந்துரைக்கும் திட்டத்தையோ அல்லது மற்றவர்கள் பரிந்துரைக்கும் திட்டத்தையோ ஆய்வு செய்யும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.