
நாட்டில் உள்ள பொருளாதார சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து பேச பிரதமர் மோடி முன்வந்து மக்களைச் சந்திக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த்சின்ஹா ஆங்கில நாளேட்டில் கட்டுரை எழுதினார். இதற்கு பா.ஜனதா மூத்த அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பீகார் மாநில எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த்சின்ஹா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சத்ருகன் சின்ஹா, டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது-
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினைகளையும், சிக்கல்களையும் பற்றி மக்களிடம் நேரடியாகச் சந்தித்து பேச பிரதமர் மோடிக்கு இதுதான் சரியான, மிகவும் உகந்த நேரம். மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் உண்மையான பத்திரிகையாளர் சந்திப்பாகும்.
நாடு முழுவதும் உள்ள நடுத்தர மக்கள், சிறு வர்த்தகர்கள், குறு வியாபாரிகள் ஆகியோர் மீது ஒருமுறையாவது பிரதமர் மோடி அக்கறை காட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். அக்கறை காட்டுவார் என நம்புவோம்.
குறிப்பாக குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நேரத்தில் இப்போதாவது அவர் விழித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.