
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் விமர்சனங்கள் மலிவானவை, அவற்றுக்கு பதில் அளிப்பது எனது தரத்தை குறைப்பதாகும். என் பின்புலம், யார் என்பது தெரியாமல் பேசுகிறார் என்று பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்தும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறித்தும் பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஆங்கில நாளேட்டில் கட்டுரை எழுதி இருந்தார். அந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவில் உள்ள அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெட்லி, ஜெயந்த் சின்ஹா என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
யஷ்வந்த் சின்ஹாவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் அருண் ஜெட்லி, “80 வயதிலும் வேலைக்கு விண்ணப்பம் செய்கிறார்’’ எனத் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யஷ்வந்த் சின்ஹா பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது-
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பா.ஜனதா மூத்த தலைவர் எல்.ேக. அத்வானியை அவமானப்படுத்திவிட்டார். முதலில் பா.ஜனதா மூத்த தலைவர் அறிவுரை என்று கூறினார்.ஜெட்லியின் கருத்துக்கள் பிரச்சினைகள் அடிப்படையில் இருக்க வேண்டும், தனிப்பட்ட நபர் சார்ந்து இருக்க கூடாது. ஆனால், அவர் என் மீது தனிப்பட்ட ரீதியான விமர்சனத்தை வைத்துள்ளார். மலிவான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பது என் தகுதிக்கு குறைவானவை எனக் கருதுகிறேன்.
அருண் ஜெட்லி முற்றிலும் எனது பின்புலத்தை மறந்து விட்டார். பொதுவாழ்க்கையில், அரசியலில் நுழைவதற்காக எனது ஐ.ஏ.எஸ். பதவி 12 ஆண்டுகள் இருக்கும்போதே நான் ராஜினாமா செய்தவன். 1989ம் ஆண்டு வி.பி.சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டேன்.
நான் தேர்தல்முறையிலான அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். அரசியலிலும் தீவிரமாக ஈடுபடாமல், அமைதியாகச் செயல்பட்டு வருகிறேன். நான் பதவியை எதிர்பார்த்து இருந்தால், என்னுடைய அனைத்து பதவிகளையும் நான் உதறி இருக்க மாட்டேன்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் நான் நிதி அமைச்சராக இருந்தபோது எனது செயல்பாடுகள் தற்போது உள்ள பா.ஜனதா அமைச்சர்கள் விமர்சித்துள்ளனர். அப்போது எனக்கு முக்கியமான கட்டத்தில் வெளியுறவுதுறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. பாதுகாப்பு விவரங்களுக்கான அமைச்சரவை குழுவில் தீவிரமான செயல்படும் நபராக நான் இருந்தேன்.
நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எனக்கு அந்த நேரத்தில் வெளியுறவுத்துறை வழங்கப்பட்டது. எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடியான சூழலில்,மிகவும் ஆக்ரோஷமான இருந்தனர்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் என்பது உதவாத அமைச்சகம் என்று கூறியநேரத்தில், நான் நிதி அமைச்சர் பதவியை துறந்து இதற்கு வந்தேன். நான் நிதி அமைச்சராக 5 பட்ஜெட்களும், 2 இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்துள்ளேன்.
புதிதாக அமைக்கப்பட்ட பொருளாதார ஆலோசனைக் குழு, என்ன செய்யப்போகிறார்கள் என்பது குறித்து இனிதான் பார்க்க வேண்டும். இப்போது வரை எதுவும் நடந்துவிடவில்லை. நான் கருத்து தெரிவிக்கும் முன், அவர்களின் செயல்பாடுகுறித்து அறிய வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.