பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். அண்மையில், மத்தியப்பிரதேச மாநிலம் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, ஜூலை 7 (இன்று), 8 ஆகிய தேதிகளில் 50,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநிலங்களுக்கு செல்லவுள்ளார். ஜூலை 7ஆம் தேதியான இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி, ஜூலை 8ஆம் தேதி தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு செல்லவுள்ளார். இதில், உத்தரப்பிரதேசத்தை தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.
இன்று காலை 10:45 மணியளவில் ராய்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மதியம் 2:30 மணியளவில் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சென்றடையும் பிரதமர், அங்கு கீதா பிரஸ் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளார். அதைத் தொடர்ந்து கோரக்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
ராஜஸ்தான் தேர்தல்... காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? காங்கிரஸ் மவுனம்!
அதன்பிறகு, மாலை 5 மணியளவில், தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஜூலை 8 ஆம் தேதியான நாளை காலை 10:45 மணியளவில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் சென்றடையும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர், மாலை 4:15 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் சென்றடையும் பிரதமர் மோடி, அம்மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.