10 ஆயிரம் அடி உயரம்.. உலகின் மிகவும் உயரமான, நீளமான அடல் சுரங்கப்பாதை.. நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.

By vinoth kumarFirst Published Oct 3, 2020, 10:28 AM IST
Highlights

இமாச்சல பிரதேசம் ரோதங் கணவாய்க்கு கீழே 10 ஆயிரம் அடி உயரத்தில், 9.02 கிமீ தூரத்திற்கு ரூ.3,300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள  உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இமாச்சல பிரதேசம் ரோதங் கணவாய்க்கு கீழே 10 ஆயிரம் அடி உயரத்தில், 9.02 கிமீ தூரத்திற்கு ரூ.3,300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள  உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இமாச்சல பிரதேசம் ரோதங் கணவாய்க்கு கீழே மணாலி - லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் அடல் சுரங்கப்பாதை  கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் இமய மலையின் பிர் பஞ்சால் மலைத் தொடரை குடைந்து கட்டப்பட்டுள்ள  இந்த சுரங்கப்பாதை 9.02 கிமீ தூரம் கொண்டது. இதன் மூலம், உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகவும் நீளமான   சுரங்கப்பாதை என்ற பெருமையை இது பெறுகிறது.

இந்த சுரங்கப்பாதை, மணாலியையும் லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கையும் ஆண்டு முழுவதும் இணைக்கிறது. இதற்கு முன் ஆண்டிற்கு 6 மாதம் கடும்  பனிப்பொழிவால், லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. மேலும், இந்த சுரங்கப்பாதை மூலம் மணாலி - லே இடையேயான தூரம் 46 கிமீ குறைவதோடு, பயண நேரம் 4-5 மணி நேரம் குறையும். எனவே,  ராணுவ தளவாடங்களை விரைவில் லே பகுதிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் இந்த சுரங்கப்பாதை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்  கருதப்படுகிறது.

ரூ.3,300 கோடியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி  இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உடனிருந்தனர். இதனையடுத்து, சுரங்கப்பாதையில் ஜீப் மூலம் பயணம் செய்யும் பிரதமர் மோடி, லாஹஸ் பள்ளத்தாக்கின் வடக்கு முனையை அடைந்து அங்கு பேருந்து போக்குவரத்து  உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

click me!