பிரதமர் மோடி அமைச்சரவை விரிவாக்கம்... கூட்டணி கட்சிகளுக்கு இடம்... அதிமுகவுக்கு இடம் உண்டா..?

By Asianet TamilFirst Published Jul 7, 2021, 8:08 AM IST
Highlights

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் விஸ்தரிக்கப்படும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கும் அதில் கிடைக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அமைச்சரவை இரண்டாம் முறையாக 2019-இல் பதவியேற்றது. இதுவரை அமைச்சரவையில் எந்த மாற்றமோ அல்லது விஸ்தரிப்போ நடக்கவில்லை. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் சிவசேனா, சிரோமணி அகாலிதளம் போன்ற கட்சிகள் அமைச்சரவையிலிருந்து விலகின. மேலும் ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோர் மரணமடைந்தனர். இதனால் இவர்கள் வகித்த பதவிகளை பாஜக அமைச்சர்கள் கூடுதலாகக் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றன. 
தற்போதைய மோடி அமைச்சரவையில் இந்திய குடியரசு கட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனவே, கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கத்தில் 20 பேருக்கு இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவைத்  தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த அப்னா தளத்தின் தலைவர் அனுபிரியா படேல், பாஜக அலகாபாத் எம்.பி. ரீட்டா பகுகுணா ஜோஷி, கான்பூர் எம்.பி. சத்யதேவ் பச்சாரி மற்றும் ராம்சங்கர் கத்தேரியா, ராஜ்குமார் சாஹல், கவுசல் கிஷோர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயண் ரானே, அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் சர்வானந்தா சோனாவால் ஆகியோரும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாஜகவைச் சேர்ந்த பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்), அனில் பலுனி (உத்தரகாண்ட்), அஷ்விணி வைஷ்ணவ் (ஒடிசா), ஜி.வி.எல்.நரசிம்மராவ் (ஆந்திரா) உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி அமைச்சரவையில் இல்லாத நிலையில், அக்கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அக்கட்சியின் ஆர்.சி.பி.சிங் மற்றும் சந்தோஷ் குஷ்வகா அமைச்சராகலாம். பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடியும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.  மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகதோல்வி அடைந்தாலும், மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே, அந்த மாநிலத்தைச் சேர்ந்த லாக்கெட் பானர்ஜி, மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோரில் ஒருவர் அமைச்சராக வாய்ப்பு உள்ளது.
இந்த அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளம், அப்னா தளம் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி தகவல் எதுவும் இல்லை. அதிமுக சார்பில் மக்களவையில் ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையில் 5 எம்.பி.களும் உள்ளனர். 

click me!