
வெளிப்படையான நிர்வாகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தத்தால் இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறிவருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் சில பொருளாதார வல்லுநர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த இரு நடவடிக்கைகளால் இந்தியாவின் ஜிடிபி குறைந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
23 நாடுகளை சேர்ந்த இந்தியா வம்சாவளியினர் கலந்துகொண்ட மாநாடு டெல்லியில் நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறிவருகிறது. உலகமே இந்தியாவை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ரயில்வே, நெடுஞ்சாலை, குடிநீர் தேவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடல் வழி வியாபாரம், இந்தியாவின் இளைஞர்களின் நலன் ஆகியவற்றை மையமாக வைத்தே மத்திய பாஜக அரசு முன்னேற்ற நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்கிட கடும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.