
கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நிதி ஆயோக் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை பாஜக அரசு உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மிகவும் பின்தங்கி இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதத்தை தாண்டினாலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
குறிப்பாக உயர் மதிப்பு ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி சரிவடைந்துள்ளதாகவும் பல துறைகளில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதி
இதையடுத்து, 2014 மக்களவை தேர்தலின்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக புதிய வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்துகிறார். இந்த ஆய்வின்போது கடந்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை பிரதமர் ஆய்வு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரவிந்த் பனகாரியா
இதுகுறித்து நிதிஆயோக் அதிகாரிகள் கூறுகையில், ‘நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக மத்திய அரசு நியமித்துள்ள நடவடிக்கை குழுவின் தலைவராக இருக்கிறார். அவர், கடந்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்களையும், எதிர்காலத்தில் உருவாக்கப்பட இருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த திட்டங்களையும் பிரதமருக்கு விளக்குவார்’ என்றனர்.